இந்திய அணி வென்ற 2 உலக கோப்பை தொடர்களின் இறுதி போட்டிகளிலும் அபாரமாக ஆடிய காம்பீர், இறுதி போட்டியில் அவ்வளவும் நெருக்கடிக்கு மத்தியிலும் சிறப்பாக ஆடியதன் ரகசியத்தை பகிர்ந்துள்ளார்.

நெருக்கடியான சூழல்களை சமாளித்து சிறப்பாக ஆடி அணியை வெற்றி பெற செய்யக்கூடிய திறன் வாய்ந்த மிகக்குறைந்த இந்திய வீரர்களில் காம்பீரும் ஒருவர். இந்திய அணியின் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவரான காம்பீர், இந்திய அணி வென்ற 2007 டி20 உலக கோப்பை மற்றும் 2011 ஒருநாள் உலக கோப்பை ஆகிய இரண்டு தொடர்களிலுமே முக்கிய பங்காற்றியவர். 

குறிப்பாக இந்த இரண்டு தொடர்களின் இறுதி போட்டிகளிலும் சிறப்பாக ஆடி அதிக ரன்களை குவித்தவர் காம்பீர் தான். 2007 டி20 உலக கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான இறுதி போட்டியிலும் 2011 ஒருநாள் உலக கோப்பை தொடரில் இலங்கைக்கு எதிரான இறுதி போட்டியிலும் காம்பீர் தான் அதிக ரன்களை குவித்தவர். இரண்டுமே வெவ்வேறான சூழல்கள். டி20 உலக கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடியது. அதில் சிறப்பாக ஆடி அதிக ரன்களை குவித்தார் காம்பீர். ஆனால் 2011 உலக கோப்பை இறூதி போட்டியில் இலக்கை விரட்டிய இந்திய அணியின் தொடக்க வீரர்களான சச்சினும் சேவாக்கும் தொடக்கத்திலேயே ஆட்டமிழந்த பிறகு சிறப்பாக ஆடி அணியை சரிவிலிருந்து மீட்டு வெற்றியை நோக்கி அழைத்து சென்றவர் காம்பீர். இந்திய அணி அந்த போட்டியில் வெற்றி பெற்றதற்கு காம்பீரின் ஆட்டம் தான் மிக முக்கிய காரணம். 

இந்த இரண்டு உலக கோப்பைகளின் இறுதி போட்டியிலும் காம்பீரின் இன்னிங்ஸ் அவரது சிறந்த பேட்டிங் ஆகும். அண்மையில் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற காம்பீர், இறுதி போட்டிகளில் சிறப்பாக ஆடியதன் ரகசியத்தை பகிர்ந்துள்ளார். 

இதுகுறித்து பேசிய காம்பீர், எந்த போட்டியில் ஆடுகிறோம் என்பதை பற்றி நான் எப்போதுமே கவலைப்படமாட்டேன், கருத்தில் கொள்ளவும் மாட்டேன். அந்த குறிப்பிட்ட சூழல் நமக்கு எதிராக போவதற்கு அனுமதிக்கக்கூடாது. உலக கோப்பை இறுதி போட்டியாக இருக்கட்டும் அல்லது தொடரின் முதல் போட்டியாக இருக்கட்டும், அதைப்பற்றி கவலைப்பட கூடாது. எந்த சூழலிலும் பேட்டிற்கும் பந்திற்கும்தான் போட்டி. பவுலருக்கு பேட்ஸ்மேனுக்கும்தான் போட்டி. அதனால் அடுத்த பந்தை எந்தளவிற்கு சிறப்பாக ஆடவேண்டும் என்பதில் மட்டும்தான் கவனம் செலுத்துவேன். பந்தை நன்றாக பார்த்து அதற்கேற்றவாறு ஆடவேண்டும். அவ்வளவுதான், அதுமட்டும் தான் என் மனதில் இருக்கும் என்று காம்பீர் தெரிவித்துள்ளார்.