ஒரு வீரராக கோலி ஆசிய கோப்பையில் ஆடாதது பின்னடைவுதான் என்றாலும் கேப்டனாக கோலி இல்லாதது பெரிய பாதிப்பு இல்லை என முன்னாள் வீரர் கவுதம் காம்பீர் கருத்து தெரிவித்துள்ளார்.

14வது ஆசிய கோப்பை தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நேற்று தொடங்கி நடந்துவருகிறது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய 6 அணிகளும் இத்தொடரில் கலந்துகொண்டு ஆடுகின்றன. 

இத்தொடரின் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஹாங்காங் அணிகளும் பி பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான் அணிகளும் உள்ளன. நேற்று நடந்த முதல் போட்டியில் இலங்கை அணியை 137 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்கதேச அணி அபார வெற்றி பெற்றது. 

இத்தொடரில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால், ரோஹித் சர்மா கேப்டனாக செயல்படுகிறார். இந்திய அணி, தனது முதல் போட்டியில் வரும் 18ம் தேதி ஹாங்காங்கை எதிர்கொள்கிறது. அதற்கு மறுநாளே பாகிஸ்தான் அணியுடன் மோதுகிறது.

இந்நிலையில், ஆசிய கோப்பை தொடர் குறித்து கருத்து தெரிவித்துள்ள கவுதம் காம்பீர், கேப்டன்சியை பொறுத்தமட்டில் கோலி இல்லாதது இந்திய அணிக்கு பெரிய பாதிப்பாக இருக்காது. ரோஹித் சர்மா சிறப்பாக அணியை வழிநடத்துவார். இந்திய அணியை வழிநடத்த தகுதியான வீரர்தான் ரோஹித்.

ஆனால் ஒரு கேப்டனால் போட்டியை வென்று கொடுக்க முடியாது. போட்டியை வெல்ல வேண்டுமென்றால் அனைத்து வீரர்களும் சிறப்பாக ஆட வேண்டும். அந்த வகையில், ஒரு பேட்ஸ்மேனாக கோலி இல்லாதது, பாதிப்பை ஏற்படுத்தலாம். எனினும் இந்திய அணி பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்திலும் கவனமாக இருந்து சிறப்பாக ஆடினால் கோப்பையை வெல்வது இந்திய அணிக்கு பெரிய விஷயமல்ல என காம்பீர் கூறினார்.