ஐபிஎல் 12வது சீசனில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் பயிற்சியாளராக காம்பீர் நியமிக்கப்படலாம் என தெரிகிறது. 

இந்திய அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்தவர் காம்பீர். 2013ம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணியில் ஆடாத காம்பீர், உள்நாட்டு போட்டிகள் மற்றும் ஐபிஎல்லில் ஆடிவந்தார். இந்நிலையில், அண்மையில் அனைத்து விதமான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற்றார் காம்பீர். 

இந்நிலையில், காம்பீருக்கும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கும் இடையேயான டுவிட்டர் உரையாடல், அவர் அந்த அணிக்கு பயிற்சியாளர் ஆவதற்கான வாய்ப்புகள் இருப்பதை உணர்த்துகின்றன. இதுவரை 11 ஐபிஎல் சீசன்கள் முடிந்துள்ளன. இதில் ஒருமுறை கூட கோப்பையை வென்றிராத மூன்று அணிகளில் பஞ்சாப் அணியும் ஒன்று. 

ஒவ்வொரு சீசனிலும் ஐபிஎல் கோப்பையை வெல்வதற்கு தேவையான அனைத்து முயற்சிகளையும் தீவிரமாக எடுத்துவருகிறது அந்த அணி. ஆனால் அந்த அணியால் கோப்பையை வெல்லவே முடியவில்லை. கடந்த சீசனில் சேவாக்கை ஆலோசகராக நியமித்து அஷ்வின் தலைமையில் புதிய உத்வேகத்துடன் களமிறங்கியது. ஆனால் கடந்த முறையும் அந்த அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. 

இதையடுத்து இந்த முறை தொடரை வெல்லும் முனைப்பில் உள்ள பஞ்சாப் அணி, வெஸ்ட் இண்டீஸ் அதிரடி வீரர் ஹெட்மயர், நியூசிலாந்து முன்னாள் கேப்டன் பிரண்டன் மெக்கல்லம் ஆகியோரை ஏலத்தில் எடுக்கும் முனைப்பில் உள்ளது. மேலும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு இரண்டு முறை கோப்பையை வென்று கொடுத்த காம்பீரை, பயிற்சியாளராக நியமிக்கும் முனைப்பில் உள்ளது பஞ்சாப் அணி. 

அண்மையில் காம்பீருக்கும் பஞ்சாப் அணிக்கும் இடையேயான டுவிட்டர் உரையாடலின் மூலம் இதை அறிந்துகொள்ள முடிகிறது. காம்பீரின் புகைப்படத்தை பகிர்ந்து, பழைய சாப்டர் முடிந்துவிட்டது. புதிய முன்னெடுப்பு என்று பதிவிட்டு காம்பீருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது. 

பஞ்சாப் அணியின் அந்த பதிவிற்கு நன்றி தெரிவித்த காம்பீர், விரைவில் சந்திப்போம் என்று பதிவிட்டுள்ளார். இதன்மூலம் காம்பீர் பஞ்சாப் அணியின் பயிற்சியாளராக செயல்பட உள்ளார் என்று கூறப்படுகிறது. 

ஓய்விற்கு பிறகு அண்மையில் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூட, பயிற்சியாளராகும் தனது விருப்பத்தை காம்பீர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.