Formula 1 Champion won history by Lewis Hamilton ...

ஃபார்முலா 1-2017 கார் பந்தயத்தில் மெர்ஸிடஸ் ஓட்டுநர் லீவிஸ் ஹாமில்டன் நான்காவது முறையாக வாகை சூடியதன்மூலம் ஃபார்முலா 1 வரலாற்றில் நான்கு பட்டங்கள் வென்ற முதல் இங்கிலாந்து வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

ஃபார்முலா 1 - 2017 சீசனுக்கான கார் பந்தயம் மொத்தம் 20 சுற்றுகளைக் கொண்டது. அதன் 18-வது சுற்று மெக்ஸிகோ கிராண்ட்ப்ரீ என்ற பெயரில் மெக்ஸிகோ சிட்டியில் நடைபெற்றது.

இந்த சீசனில் ஹாமில்டன், செபாஸ்டியன் வெட்டல் இடையே போட்டி நிலவி வந்தது. வெட்டல் பட்டம் வெல்லும் வாய்ப்பை தக்கவைக்க, மெக்ஸிகோ கிராண்ட்ப்ரீ போட்டியில் முதலிடம் பிடிக்க வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கினார்.

ஆனால் முதல் சுற்றிலேயே ஹாமில்டன், வெட்டல் ஆகியோரின் கார்கள் மோதி விபத்துக்குள்ளானது. இதனால் ஹாமில்டன் கார் பஞ்சர் ஆனது. வெட்டலுக்கு பின்னடைவு ஏற்பட்டது. எனினும் வெட்டல் தொடர்ந்து போராட, ஹாமில்டன் சக்கரத்தை மாற்றிவிட்டு பந்தயத்தை தொடர்ந்தார்.

ஆனால், இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட ரெட்புல் டிரைவர் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் 1 மணி, 36 நிமிடம், 26.552 விநாடிகளில் இலக்கை எட்டி முதலிடத்தைப் பிடித்தார். வெட்டலுக்கு 4-வது இடமும், ஹாமில்டனுக்கு 9-வது இடமும் கிடைத்தன.

இதன்மூலம் ஹாமில்டன் சாம்பியன் பட்டத்தை உறுதி செய்தார். வெட்டலின் சாம்பியன் பட்ட கனவு கலைந்தது.

தற்போதைய நிலையில் ஹாமில்டன் 333 புள்ளிகளுடன் முதலிடத்திலும், வெட்டல் 277 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் உள்ளனர். இன்னும் 2 கார் பந்தயங்கள் மீதமுள்ளன.

நான்காவது பட்டத்தை வென்றதன் மூலம் ஃபார்முலா 1 வரலாற்றில் அதிக பட்டங்கள் வென்றவர்கள் வரிசையில் வெட்டல், அலேன் பிராஸ்ட் ஆகியோருடன் 3-வது இடத்தைப் பகிர்ந்து கொண்டார் ஹாமில்டன்.