உலக கோப்பை நெருங்கிவிட்ட நிலையில், இந்திய அணி வலுவாக உள்ளது. பேட்டிங், பவுலிங் என அனைத்திலும் சிறந்து விளங்குகிறது. 

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிரான ஒருநாள் தொடர்களை தொடர்ச்சியாக வென்றுள்ளது. இந்த வெற்றிகள் இந்திய அணியின் நம்பிக்கையை அதிகரித்துள்ளது. உலக கோப்பைக்கு முந்தைய இந்த வெற்றிகள், இந்திய அணிக்கு உத்வேகத்தையும் உற்சாகத்தையும் அளித்துள்ளன. 

ரோஹித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி என டாப் ஆர்டர் வலுவாக உள்ளது. தோனி மீண்டும் ஃபார்முக்கு திரும்பியிருப்பது கூடுதல் பலம். அதேபோல பும்ரா, புவனேஷ்வர் குமார், ஷமி, குல்தீப், சாஹல் என பவுலிங் யூனிட்டும் வலுவாக உள்ளது. இந்திய அணியின் ஒரே பிரச்னையாக இருந்த மிடில் ஆர்டருக்கும் ராயுடு மற்றும் கேதர் ஜாதவின் மூலம் தீர்வு காணப்பட்டதாக கருதப்பட்ட நிலையில், அவ்வப்போது மிடில் ஆர்டர்கள் படுமோசமாக சொதப்பிவருகின்றனர். 

நியூசிலாந்துக்கு எதிரான நான்காவது போட்டியில் ராயுடு டக் அவுட், கேதர் ஜாதவ் 1 ரன் என சொதப்பினர். எனவே மிடில் ஆர்டரில் மாற்று வீரர் ஒருவர் தேவை என்பதோடு, அவர் பவர் ஹிட்டராக இருக்க வேண்டியது அவசியம். அந்த வகையில் உலக கோப்பை அணியில் இளம் அதிரடி வீரர் ரிஷப் பண்ட் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிரான ஒருநாள் தொடர்களில் அவர் இடம்பெறவில்லை. எனினும் அவர் உலக கோப்பை அணியில் இடம்பெறுவார் என்று தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், உலக கோப்பையில் ரிஷப் பண்ட் ஆடுவது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் தீப் தாஸ்குப்தா கருத்து தெரிவித்துள்ளார். மை நேஷன் ஆங்கில இணையதளத்துக்கு பெங்களூருவில் அவர் அளித்த பிரத்யேக பேட்டியில், உலக கோப்பையில் ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பராக இல்லாமல் ஒரு பேட்ஸ்மேனாக ஆட வேண்டும். தோனி தான் விக்கெட் கீப்பர். அதில் எந்தவித மாற்றமுமில்லை. ஆனால் ரிஷப் பண்ட் ஒரு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக ஆட வேண்டும். ரிஷப் பண்ட் உலக கோப்பையில் அணியில் இடம்பெற்றிருந்தால் அது பெரிய ஆச்சரியமாக இருக்காது. மிடில் ஆர்டருக்கு ராயுடு, கேதர் ஜாதவ், தினேஷ் கார்த்திக் என பெரும் போட்டியே நிலவுகிறது. எனினும் ரிஷப் பண்ட் தான் இந்திய அணியின் எதிர்காலம். தோனியின் ஓய்வுக்கு பிறகு அவருக்கு அந்த இடம் தானாகவே கிடைத்துவிடும் என்று தீப் தாஸ்குப்தா தெரிவித்துள்ளார்.