ரிஷப் பண்ட் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு இன்னும் முழுமையாக தயாராகவில்லை எனவும் அதனால் அவருக்கு போதிய அவகாசம் வழங்கி பொறுமையாக இந்திய அணியில் சேர்க்குமாறு முன்னாள் வீரர் தீப் தாஸ்குப்தா ஆலோசனை வழங்கியுள்ளார். 

21 வயதான இளம் வீரர் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமானார். அறிமுக போட்டியில் சிக்ஸர் விளாசி சர்வதேச கிரிக்கெட்டில் தனது ரன் கணக்கை தொடங்கினார். இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் சதம் விளாசினார். வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக நடந்துவரும் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியிலும் அதிரடியாக ஆடி 92 ரன்களை குவித்து, சதத்தை தவறவிட்டார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் டிஃபென்ஸ் ஆடுவது முக்கியம். ஆனால் ரிஷப் பண்ட் பெரும்பாலும் டிஃபென்ஸ் ஆடாமல் அடித்து அதிரடியாக ஆடுகிறார். இதை முன்னாள் வீரர்கள் பலரும் ஒரு குறையாக விமர்சித்தனர். டெஸ்ட் கிரிக்கெட்டில் அவசரப்படாமல் நிதானமாக ஆடுவது அவசியம் என்பதை உணர்த்துவதற்காகவே அதை சுட்டிக்காட்டினர்.

அதுமட்டுமல்லாமல் ரிஷப் பண்ட்டின் விக்கெட் கீப்பிங் டெக்னிக்கும் விமர்சனத்துக்கு உள்ளானது. இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் பைஸ் மூலம் 70க்கும் மேற்பட்ட ரன்களை விட்டுக்கொடுத்தார். விக்கெட் கீப்பிங்கின்போது ரிஷப் பண்ட்டின் கால் நகர்வுகளிலும் டெக்னிக்குகளிலும் இன்னும் அவர் மேம்பட வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் சையத் கிர்மானி அறிவுறுத்தினார். 

இந்நிலையில், ரிஷப் பண்ட் டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு இன்னும் முழுமையாக தயாராகவில்லை என முன்னாள் வீரரும் கிரிக்கெட் வர்ணனையாளருமான தீப் தாஸ்குப்தா கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசியுள்ள தீப் தாஸ்குப்தா, 21 வயதான ரிஷப் பண்ட், 2 ஆண்டுகள் மட்டுமே ரஞ்சி போட்டிகளில் ஆடியுள்ளார். அதனால் அவருக்கு இன்னும் அவகாசம் வழங்கி அதிகமான ரஞ்சி போட்டிகளில் ஆடவிட்டு பின்னர் அணியில் சேர்க்க வேண்டும். இந்திய ஆடுகளங்களில் ஸ்பின் பவுலிங்கிற்கு விக்கெட் கீப்பிங் செய்வது சவாலான விஷயம். இளம் வீரரான ரிஷப் பண்ட்டிற்கு அவகாசம் வழங்கி சரியாக வழிகாட்ட வேண்டியது அவசியம். திடீரென அணியில் சேர்த்துவிட்டு சில போட்டிகளுக்கு பிறகு நீக்குவதில் அர்த்தமில்லை என்று தீப் தாஸ்குப்தா தெரிவித்துள்ளார்.