இந்திய அணியின் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் ஆர்.பி.சிங் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று இரவு ட்விட்டரில் அறிவித்தார். உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த வேகப்பந்துவீச்சாளர் ஆர்.பி.சிங் இந்திய அணியில் கடந்த 2005-ம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் அறிமுகமானார். இந்திய அணிக்காக 13 ஆண்டுகள் விளையாடியுள்ள ஆர்.பி.சிங், இதுவரை 14 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 40  விக்கெட்டுகளையும், 58 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 69 விக்கெட்டுகளையும், டி20 போட்டியில் 20 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

கடைசியாக 2011-ம் ஆண்டு இங்கிலாந்து தொடருக்கான அணியில் ஆர்.பி.சிங் இடம் பெற்றார் அதன்பின் அணியில் இருந்த ஓரம் கட்டப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் தொடரில் கடந்த 2008-ம் ஆண்டு டெக்கான் சார்ஜர்ஸ் அணியில் அதன்பின் கடைசியாக 2016-ம் ஆண்டு புனே சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியிலும் ஆர்.பி.சிங் இடம் பெற்றார். இதுவரை 86 போட்டிகளில் விளையாடியுள்ளார். 

தனது ஓய்வு குறித்து ஆர்.பி.சிங் ட்விட்டரில் வெளியிட்டுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: நான் இன்றுடன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறேன். என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கை இனிமையாகவும், மறக்க முடியாத நினைவுகள் கொண்டதாகவும் இருக்க உதவிய அனைவருக்கும் மீண்டும் நன்றியைத் தெரிவிக்கிறேன். 13 ஆண்டுகளுக்கு முன் கடந்த 2005-ம் ஆண்டு செப்டம்பர் 4-ம் தேதி நான் இந்திய அணிக்காக முதன்முதலில் விளையாடத் தொடங்கினேன். என் வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவங்கள் நிறைந்தது. 
 
என் வாழ்வில் எப்போதும் நினைவில் இருப்பது, ராகுல் டிராவிட் தலைமையில் இங்கிலாந்தில் 2007-ம் ஆண்டு டெஸ்ட் தொடரில் விளையாடினேன். அப்போது, இங்கிலாந்துக்கு எதிராக 1-0 என்று டெஸ்ட் தொடரை கைப்பற்றினோம். வெற்றி பெற்ற அந்த டெஸ்ட் போட்டியில் நான் 117 ரன்கள் கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தியதை என்னால் மறக்க முடியாது. 2-வது இன்னிங்ஸில் மைக்கேன் வான், கெவின் பீட்டர்ஸன், பால் காலிங்வுட், இயான் பெல், மான்டி பனேசர் ஆகியோரை வீழ்த்தி வெற்றிக்கு காரணமானவர்களில் ஒருவராக இருந்தேன். 

உத்தரப்பிரதேசத்தில் சிறிய கிராமத்தில் பிறந்தேன். என் வாழ்வில் இந்திய அணிக்காக விளையாடுவேன் என்று நினைக்கவே இல்லை. என் ரசிகர்களுக்கு மீண்டும் நன்றி தெரிவிக்கிறேன். என் மீது நம்பிக்கை வைத்தவர்களுக்காக, விமர்சனம் செய்தவர்களுக்காக, பாராட்டியவர்களுக்காக, என்னுடன் கடினமான காலகட்டத்தில் உடன் இருந்தவர்களுக்காக நான் நன்றி தெரிவிக்கிறேன் நன்றி இவ்வாறு ஆர்.பி.சிங் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.