இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் மைதானத்தில் முதல் முறையாக நடக்கிறது.

கடந்த 30 ஆண்டுகளில், இந்தியாவில் முதல்முறையாக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடத்தப்படுகிறது. அதேபோல், ராஜ்கோட் மைதானத்தில் நடத்தப்படும் முதல் டெஸ்ட் போட்டி இதுவாகும்.

இதுதவிர, இந்தியாவில் நடத்தப்படும் டெஸ்ட் தொடர்களிலேயே முதல் முறையாக, இந்தத் தொடரில் "டிஆர்எஸ்' எனப்படும், நடுவர் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யும் முறை சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 2012, 2014-ஆம் ஆண்டுகளில் இங்கிலாந்து அணியிடம் டெஸ்ட் தொடரில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் இந்திய அணி களமிறங்குகிறது. அதேவேளையில், இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில், தனது ஹாட்ரிக் வெற்றியை கைப்பற்றும் எண்ணத்தில் இங்கிலாந்து அணி களம் காணும்.

இந்திய அணியைப் பொருத்த வரையில் சமீபத்தில் மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளதால், அதே உத்வேகத்துடன் இங்கிலாந்து அணியை எதிர்கொள்ளும்.

இதுவே இங்கிலாந்து அணியைப் பொருத்த வரையில், சமீபத்தில் டாக்காவில் நடைபெற்ற வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது. அத்துடன், டெஸ்ட் போட்டிகளில் அந்த அணியிடம் முதல் முறையாக இங்கிலாந்து தோல்வியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே, அதிலிருந்து மீளும் முயற்சியாக, இந்தத் தொடரில் இங்கிலாந்து செயல்படும்.

எனினும், கடந்த 2012-ஆம் ஆண்டுக்குப் பிறகு, இந்திய அணி சொந்த மண்ணில் எந்த டெஸ்ட் தொடரையும் இழக்கவில்லை என்பதையும் அந்த அணி அறிந்திருக்கும்.
இந்திய அணி வீரர்களைப் பொருத்த வரையில், கேப்டன் கோலி களத்தில் நிலைத்து, பேட்டிங்கில் பலத்தை காட்ட முனைவார். அவருக்கு உறுதுணையாக, ரஹானே, முரளி விஜய், கெளதம் கம்பீர், சேத்தேஷ்வர் புஜாரா ஆகியோர் களத்தில் சிறப்புடன் செயல்பட முயற்சிப்பர்.

இந்தியா அணி விவரம்:
விராட் கோலி (கேப்டன்), முரளி விஜய், கெளதம் கம்பீர், புஜாரா, ரஹானே, அஸ்வின், விருத்திமான் சாஹா (விக்கெட் கீப்பர்), ஜடேஜா, அமித் மிஸ்ரா, முகமது சமி, இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், ஹர்திக் பாண்டியா, கருண் நாயர், ஜெயந்த் யாதவ்.

இங்கிலாந்து அணி விவரம்:
அலாஸ்டர் குக் (கேப்டன்), ஜானி பேர்ஸ்டோவ், ஜேக் பால், கேரி பேலன்ஸ், கெரத் பேட்டி, ஸ்டுவர்ட் பிராட், ஜோஸ் பட்லர், பென் டக்கெட், ஸ்டீவன் ஃபின், ஹசீப் ஹமீது, மொயீன் அலி, ஸஃபர் அன்சாரி, ஆதில் ரஷீத், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ்.