டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் இன்று தொடங்கும் முதல் நாள் முதல் ஆட்டத்தில் பாம்ப்ரி – டியர்னி மோதுகின்றனர்.

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் இந்தியா - நியூஸிலாந்து அணிகள் மோதும் ஆசிய - ஓசியானியா குரூப் 1 சுற்று புனேவில் இன்று தொடங்குகிறது.

மூன்று நாள்கள் நடைபெறும் இந்தப் போட்டியின் முதல் நாளில் ஆடவர் ஒற்றையர் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

முதல் ஆட்டத்தில் சர்வதேச தரவரிசையில் 368-ஆவது இடத்தில் இருக்கும் இந்தியாவின் யூகி பாம்ப்ரி, நியூஸிலாந்தின் முதல் நிலை வீரரான (சர்வதேச தரவரிசை 414) ஃபின் டியர்னியை எதிர்கொள்கிறார்.

இரண்டாவது ஒற்றையர் ஆட்டத்தில் சர்வதேச தரவரிசையில் 206-ஆவது இடத்தில் இருக்கும் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன், நியூஸிலாந்தின் ஜோஷ் ஸ்டாட்ஹாமை (சர்வதேச தரவரிசை 417) சந்திக்கிறார்.

டேவிஸ் கோப்பை போட்டியில் இந்தியாவும், நியூஸிலாந்தும் இதுவரை 8 முறை மோதியுள்ளன. அதில் இந்தியா 5 முறையும், நியூஸிலாந்து 3 முறையும் வெற்றி கண்டுள்ளன.

1970-களில் நியூஸிலாந்திடம் 3 முறை தோற்றுள்ளது இந்தியா. 1978-க்குப் பிறகு நடைபெற்ற 5 போட்டிகளிலும் இந்திய அணியே வாகை சூடியுள்ளது.

2-ஆவது நாளில் நடைபெறும் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் லியாண்டர் பயஸ் - விஷ்ணுவர்தன் ஜோடி, நியூஸிலாந்தின் ஆர்டெம் சிடாக்-மைக்கேல் வீனஸ் ஜோடியை சந்திக்கிறது.

டேவிஸ் கோப்பையில் 55-ஆவது முறையாக களமிறங்கும் பயஸ், இந்த ஆட்டத்தில் வெல்லும்பட்சத்தில் இது அவருடைய 43-ஆவது வெற்றியாக அமையும்.

தற்போதைய நிலையில் பயஸும், இத்தாலியின் பியட்ராங்கெலியும் தலா 42 வெற்றிகளுடன் முதலிடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

18 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்றவரான பயஸ், முன்னதாக சாகேத் மைனேனியுடன் இணைந்து களமிறங்குவதாக இருந்தது. ஆனால் சென்னை ஓபனின்போது காயமடைந்த சாகேத் மைனேனி, அதிலிருந்து முழுமையாகக் குணமடையாததால் கடைசி நேரத்தில் விலகினார். இதையடுத்து ரோஹன் போபண்ணா அழைக்கப்பட்டுள்ளார். ஆனால் அவர் விளையாட மறுத்ததைத் தொடர்ந்து விஷ்ணுவர்தன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.