தமிழகத்தைச் சேர்ந்த வாள்வீச்சு வீராங்கனை சி.ஏ.பவானி தேவிக்கு, தமிழக முதல்வர் இடைப்பாடி கே.பழனிசாமி நிதியுதவி வழங்கி சிறப்பித்தார்.

இதுகுறித்து, தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிவிப்பு:

“தலைச்சிறந்த ஆண் - பெண் விளையாட்டு வீரர்கள், தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ள உயர்நிலைக் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு வெளிநாட்டுப் பயிற்சி, வெளிநாடுகளில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்கான செலவினம் உள்ளிட்டவற்றை மாநில அரசே அளித்து வருகிறது.

அதன்படி, இந்தத் திட்டத்தில் வாள்வீச்சு வீராங்கனையான சி.ஏ.பவானி தேவி சேர்க்கப்பட்டுள்ளார். இதுவரையில், அவருக்கு ரூ.22.04 இலட்சம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பிரான்ஸில் நடந்த உலகக் கோப்பை போட்டி, மெக்ஸிகோவில் நடந்த கிராண்ட்ப்ரீ போட்டிகளில் பங்கேற்றதற்கான செலவுத் தொகையான ரூ.5.43 இலட்சம் காசோலையாக அளிக்கப்பட்டது.

இந்தத் தொகையை ஜெயலலிதாவின் பிறந்த தினமான நேற்று (பிப்ரவரி 24) பவானி தேவியின் தாயாரிடம் முதல்வர் இடைப்பாடி கே.பழனிசாமி வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், சட்டப் பேரவை உறுப்பினர் பி.வெற்றிவேல், இளைஞர் நலன்-விளையாட்டு மேம்பாட்டுத் துறை முதன்மைச் செயலாளர் ராஜேந்திர குமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.