ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் 3-ஆவது சுற்றுக்கு சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர், ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர் ஆகியோர் முன்னேற்றம் அடைந்துள்ளனர்.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி, ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. புதன்கிழமை நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவின் 2-ஆவது சுற்றில் 17 முறை கிராண்ட் ஸ்லாம் சாம்பியனும், தரவரிசையில் 17-ஆம் இடம் வகிப்பவருமான சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர், அமெரிக்காவின் தகுதிச் சுற்று வீரரான நாஹ் ரூபினை எதிர்கொண்டார்.
இரண்டு மணி நேரம் 4 நிமிடம் ரசிகர்களை குதூகலப்படுத்திய இந்த ஆட்டத்தில் 7-5, 6-3, 7-6 (7/3) என்ற செட் கணக்கில் ஃபெடரர் வெற்றி பெற்று 3-ஆவது சுற்றுக்கு முன்னேறினார். அவர் தனது அடுத்த ஆட்டத்தில், நீண்ட நாள் எதிரியான செக் குடியரசின் தாமஸ் பெர்டிச்சுடன் மோதுகிறார்.
மகளிர் ஒற்றையர் பிரிவில் முதல் நிலை வீராங்கனையான ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர், சகநாட்டு வீராங்கனையான கரீனா வித்தியோஃப்ட்டை 6-2, 6-7 (3/7), 6-2 என்ற செட் கணக்கில் தோற்கடித்தார்.
இந்த வெற்றி கெர்பருக்கு 29-ஆவது பிறந்தநாள் பரிசாக அமைந்தது. வெற்றி பெற்று அவர் வெளியேறும்போது ரசிகர்கள் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறும் வகையில், முழக்கங்களை எழுப்பினர்.
நடப்புச் சாம்பியனான கெர்பர், தனது மூன்றாவது சுற்றில், செக் குடியரசின் கிரிஸ்டியானா பிளிஸ்கோவா (இவர் கரோலினா பிளிஸ்கோவாவின் சகோதரி) அல்லது 27-ஆவது இடத்தில் உள்ள ருமேனியாவின் இரினா கேமிலா பேகுவுடன் மோதுவார்.
