யுவராஜ் சிங்கை மீண்டும் தோனியுடன் சேர்த்து காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

ஐபிஎல் 12வது சீசன் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்க உள்ளது. அடுத்த சீசனுக்கான ஏலம் அடுத்த மாதம் 18ம் தேதி ஜெய்ப்பூரில் நடக்க உள்ள நிலையில், அதற்கு முன்னதாக அனைத்து ஐபிஎல் அணிகளும் தாங்கள் தக்கவைக்கும் மற்றும் கழட்டிவிடும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டது. 

கழட்டிவிடப்பட்ட வீரர்களில் இந்திய அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்த யுவராஜ் சிங்கை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி விடுவித்துள்ளது. கடந்த சீசனில் யுவராஜ் சிங் படுமோசமாக ஆடினார். ஒரு போட்டியில் கூட சரியாக ஆடவில்லை. 8 போட்டிகளில் ஆடி வெறும் 65 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதனால் அதிருப்தியடைந்த பஞ்சாப் அணி நிர்வாகம் அவரை விடுவித்துள்ளது.

இதையடுத்து ஒரு காலத்தில் அடி வெளுத்து வாங்கி கொடிகட்டி பறந்த யுவராஜ் சிங்கை, மீண்டும் தோனியுடன் களத்தில் காண ரசிகர்கள் விரும்புகின்றனர். அதற்காக தோனி கேப்டனாக உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி யுவராஜ் சிங்கை ஏலத்தில் எடுக்க வேண்டுமென ரசிகர்கள் டுவிட்டரில் வலியுறுத்தி வருகின்றனர். 

தோனியும் யுவராஜூம் மீண்டும் இணைந்து ஆடுவதை காண ஆவலாக உள்ள ரசிகர்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங்கிடம் யுவராஜை சிஎஸ்கே அணியில் எடுக்க வலியுறுத்தி வருகின்றனர்.

தோனி தலைமையிலான இந்திய அணி வென்ற டி20 உலக கோப்பை, ஒருநாள் உலக கோப்பை ஆகிய தொடர்களில் முக்கியமான பங்காற்றியவர் யுவராஜ் சிங். 2011ம் ஆண்டு இந்திய அணி உலக கோப்பையை வென்றபோது தொடர் நாயகன் விருதை வென்றவர் யுவராஜ். தோனி தலைமையிலான இந்திய அணி குவித்த முக்கியமான தொடர்களில் நட்சத்திர நாயகனாக ஜொலித்தவர் யுவராஜ்.

எனவேதான் ரசிகர்கள் மீண்டும் தோனியின் தலைமையிலான சிஎஸ்கேவில் அவருடன் இணைந்து யுவராஜ் ஆடுவதை பார்க்க ஆவலாக உள்ளனர். இனிமேல் சர்வதேச போட்டிகளில் இது சாத்தியமில்லை என்பதால் ஐபிஎல் வாயிலாக தங்கள் ஆசையை நிறைவேற்றிக்கொள்ள நினைக்கின்றனர் ரசிகர்கள்.