இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான முதல் டி20 கிரிக்கெட் ஆட்டம் கான்பூரில் இன்று தொடங்குவதையடுத்து ரசிகர்களுக்கு விருந்து படைக்க காத்திருக்கிறது.
பலம் வாய்ந்த பேட்டிங்: இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை இழந்தபோதிலும், கடைசி ஒரு நாள் ஆட்டத்தில் வெற்றி கண்டிருப்பதால் இந்த ஆட்டத்தில் மிகுந்த நம்பிக்கையோடு களமிறங்குகிறது இங்கிலாந்து அணி.
அந்த அணியில் ஜோ ரூட் காயத்திலிருந்து மீண்டுவிட்டதால் அவர் இந்த ஆட்டத்தில் விளையாடுவது உறுதியாகியுள்ளது.
சாம் பில்லிங்ஸ், ஜேசன் ராய், ஜோ ரூட், கேப்டன் மோர்கன், ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், மொயீன் அலி என வலுவான பேட்ஸ்மேன்களைக் கொண்டுள்ளது இங்கிலாந்து.
வேகப்பந்து வீச்சைப் பொறுத்தவரையில் கிறிஸ் ஜோர்டான், லியாம் பிளங்கெட், ஜேக் பால், டைமல் மில்ஸ், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் பலம் சேர்க்கின்றனர். புதுமுக வீரரும், இடது கை வேகப்பந்து வீச்சாளருமான டைமல் மில்ஸ் மீது மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. சுழற்பந்து வீச்சைப் பொறுத்தவரையில் மொயீன் அலியை நம்பியுள்ளது இங்கிலாந்து.
இந்திய அணியைப் பொறுத்தவரையில் ஒரு நாள் போட்டியில் விளையாடாத ரெய்னா போன்ற சிலர், இந்த ஆட்டத்தில் களமிறங்கவுள்ளனர்.
இளம் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த் இந்த ஆட்டத்தில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
19 வயதுக்குள்பட்டோருக்கான உலகக் கோப்பை போட்டியில் கலக்கிய ரிஷப் பந்த், இந்த ஆட்டத்தில் களமிறங்கும்பட்சத்தில் கே.எல்.ராகுல் அல்லது மன்தீப் சிங்குடன் தொடக்க வீரராக களமிறங்க வாய்ப்புள்ளது.
மிடில் ஆர்டரைப் பொறுத்தவரையில் கேப்டன் கோலி, யுவராஜ் சிங், தோனி ஆகியோர் பலம் சேர்க்கின்றனர்.
அதேநேரத்தில் 6-ஆவது பேட்ஸ்மேன் இடத்துக்கு சுரேஷ் ரெய்னா, மணீஷ் பாண்டே ஆகியோரிடையே போட்டி நிலவுகிறது.
கேதார் ஜாதவ் போன்ற இளம் வீரர்கள் அசத்தலாக ஆடி வருவதால் மூத்த வீரரான ரெய்னாவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
ஆல்ரவுண்டர் இடத்தில் ஹார்திக் பாண்டியா களமிறங்குகிறார். வேகப்பந்து வீச்சைப் பொறுத்தவரையில் மூத்த வீரரான ஆசிஷ் நெஹ்ராவுடன் புவனேஸ்வர் குமார் அல்லது ஜஸ்பிரித் பூம்ரா 2-ஆவது பந்துவீச்சாளராக இடம்பெற வாய்ப்புள்ளது.
சுழற்பந்து வீச்சைப் பொறுத்தவரையில் மூத்த வீரர்களான அஸ்வின், ஜடேஜா ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ள நிலையில், அமித் மிஸ்ரா, பர்வீஸ் ரசூல் ஆகியோரை நம்பியுள்ளது இந்தியா.
ஒரு நாள் தொடரில் 3 போட்டிகளிலுமே இரு அணிகளும் தலா 300 ரன்களுக்கு மேல் குவித்தன. அதனால் டி20 ஆட்டமும் ரசிகர்களுக்கு விருந்து படைப்பதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
