இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் இரு போட்டிகளுக்கான 15 பேர் கொண்ட இந்திய அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் காயம் காரணமாக ரோகித் சர்மா இடம் பெறவில்லை. மூத்த வீரர் கவுதம் கம்பீர் தொடர்ந்து நீடிக்கிறார், அதேசமயம், முதல்முறையாக ஹர்திக் பாண்டயா டெஸ்ட்தொடருக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. இதில் முதல்டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் வரும் 9-ந்தேதி தொடங்குகிறது. இந்நிலையில், முதல் இரு போட்டிகளுக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது.
எம்.எஸ்.கே. பிரசாத் தலைமையிலான தேர்வுக்குழுவின் டெல்லியில் இன்று ஆலோசனை நடத்தி 15 பேர் கொண்ட இந்திய அணியை தேர்வுத் செய்தனர். இதில் மோசமான ‘பார்ம்’ காரணமாக வெளியில் இருக்கும் சிகார் தவான், காயம் காரணமாக ஓய்வில் இருக்கும் கே.எல். ராகுல் ஆகியோருக்கு இடம் மறுக்கப்பட்டுள்ளது. அதேபோல, தொடையில் ஏற்பட்ட தசைநார் காயம் காரணமாக ஓய்வில் உள்ள ரோகித் சர்மாவும் தேர்வு செய்யப்படவில்லை.
கடந்த இரு ஆண்டுகளுக்கு பின் நியூசிலாந்து தொடரில் இடம் பிடித்த அனுபவ வீரர் கவுதம் கம்பீர் தொடர்ந்து அணியில் நீடிக்கிறார். ஒருநாள் போட்டியில் மட்டும் இடம் பெற்று வந்த இளம் வீரர் ஹர்திக் பாண்டயா, முதல்முறையாக டெஸ்ட் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
நியூசிலாந்து தொடரின் போது சிக்குன் குன்யா காய்ச்சலால் தொடரில் இடம் பெறாமல் போன, வேகப்பந்துவீச்சாளர் இசாந்த் சர்மா மீண்டும் அணியில் இடம் பெற்றுள்ளார். மற்ற வகையில் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
இந்திய அணி வீரர்கள் விவரம்:
விராத் கோலி(கேப்டன்), அஜின்கயே ரகானே(துணைகேப்டன்), அஸ்வின், ரவிந்திர ஜடேஜா, அமித் மிஸ்ரா, சட்டீஸ்வர் புஜாரா, கம்பீர், கருண் நாயர், விர்திமான் சாஹா, இசாந்த் சர்மா, முரளி விஜய், உமேஷ் யாதவ், முகமது ஷமி, ஹர்திக் பாண்டயா, ஜெயந்த் ஜாதவ்.
முதல் போட்டி மத்திய பிரதேச மாநிலம் ராஜ்கோட்டில் வரும் 9-ந் தேதியும், 2-வது போட்டி, விசாகப்பட்டிணத்தில் 17-21 தேதி வரையிலும் நடக்கிறது.
