இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 159.3 ஓவர்களில் 537 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தது.
மொயீன் அலி 117 ஓட்டங்களும், பென் ஸ்டோக்ஸ் 128 ஓட்டங்களும் குவித்தனர்.
ராஜ்கோட்டில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணியில் ஜோ ரூட் 124 ஓட்டங்கள் சேர்த்து ஆட்டமிழக்க, முதல் நாள் ஆட்டநேர முடிவில் 93 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 311 ஓட்டங்கள் குவித்திருந்தது. மொயீன் அலி 99, பென் ஸ்டோக்ஸ் 19 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தனர்.
2-ஆவது நாளான வியாழக்கிழமை தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணியில் மொயீன் அலி 195 பந்துகளில் சதம் கண்டார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய அவர் 213 பந்துகளில் 13 பவுண்டரிகளுடன் 117 ஓட்டங்கள் சேர்த்து முகமது சமி பந்துவீச்சில் போல்டு ஆனார்.
இதையடுத்து ஸ்டோக்ஸுடன் இணைந்தார் விக்கெட் கீப்பர் ஜானி பேர்ஸ்டோவ். இந்த ஜோடி அசத்தலாக ஆட இங்கிலாந்தின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. பந்துகளை வீணடிக்காமல் விளையாடிய பேர்ஸ்டோவ் அமித் மிஸ்ரா பந்துவீச்சில் சிக்ஸரை விளாசி ஆட்டத்தில் விறுவிறுப்பை ஏற்படுத்தினார்.
மறுமுனையில் நிதானமாக ஆடிய பென் ஸ்டோக்ஸ் 89 பந்துகளில் அரை சதத்தை எட்டினார். இதன்பிறகு வேகமாக ஓட்டங்கள் சேர்த்த ஜானி பேர்ஸ்டோவ் 4 ஓட்டங்களில் அரை சதத்தை நழுவவிட்டார். அவர் 57 பந்துகளில் 2 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 46 ஓட்டங்கள் எடுத்து சமி பந்துவீச்சில் சாஹாவிடம் கேட்ச் ஆனார். இந்த ஜோடி 6-ஆவது விக்கெட்டுக்கு 99 ஓட்டங்கள் சேர்த்தது.
பின்னர் வந்த கிறிஸ் வோக்ஸ் 4, ஆதில் ரஷித் 5 ஓட்டங்களில் நடையைக் கட்ட, 130 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 465 ஓட்டங்கள் எடுத்திருந்தது இங்கிலாந்து. இதனால் அந்த அணி 500 ஓட்டங்களுக்குள் ஆட்டமிழந்துவிடும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் 9-ஆவது விக்கெட்டாக களமிறங்கிய அன்சாரி தடுப்பாட்டம் ஆட, பென் ஸ்டோக்ஸ் 173 பந்துகளில் சதமடித்தார். இதனால் இங்கிலாந்து அணி 500 ஓட்டங்களைக் கடந்தது. அந்த அணி 517 ஓட்டங்களை எட்டியபோது பென் ஸ்டோக்ஸ் ஆட்டமிழந்தார். அவர் 235 பந்துகளில் 2 சிக்ஸர், 13 பவுண்டரிகளுடன் 128 ஓட்டங்கள் குவித்தார்.
இதையடுத்து ஸ்டூவர்ட் பிராட் களமிறங்க, மறுமுனையில் ஆமை வேகத்தில் ஆடிய அன்சாரி 83 பந்துகளில் 32 ஓட்டங்கள் சேர்த்து மிஸ்ரா பந்துவீச்சில் வெளியேறினார்.
இதனால் இங்கிலாந்து அணி 159.3 ஓவர்களில் 537 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.
இந்தியத் தரப்பில் ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளையும், முகமது சமி, உமேஷ் யாதவ், அஸ்வின் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.
பின்னர் முதல் இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி 2-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் 23 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 63 ஓட்டங்கள் எடுத்துள்ளது. முரளி விஜய் 25, கெளதம் கம்பீர் 28 ஓட்டங்களுடன் களத்தில் உள்ளனர்.
இங்கிலாந்தின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை எட்டுவதற்கு இந்தியா இன்னும் 474 ஓட்டங்கள் எடுக்க வேண்டியுள்ளது. அதேநேரத்தில் பாலோ-ஆனை தவிர்ப்பதற்கு இந்தியா 275 ஓட்டங்கள் எடுக்க வேண்டியுள்ளது.
