மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் வெறும் 9 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி 4-வது முறையாக கோப்பையைக் கைப்பற்றி ரூ.4.25 கோடியைத் தட்டிச் சென்றது இங்கிலாந்து.

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் இலண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணியில் லாரன் வின்பீல்டு-டேமி பியூமான்ட் இணை முதல் விக்கெட்டுக்கு 11.1 ஓவர்களில் 47 ஓட்டங்கள் சேர்த்தது. வின்பீல்டு 35 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 24 ஓட்டங்கள் சேர்த்து ராஜேஷ்வரி பந்துவீச்சில் போல்டு ஆனார்.

இதையடுத்து சாரா டெய்லர் களமிறங்க, டேமி பியூமான்ட் 37 பந்துகளில் 23 ஓட்டங்கள் எடுத்த நிலையில் பூனம் யாதவ் பந்துவீச்சில் கோஸ்வாமியிடம் கேட்ச் ஆனார். பின்னர் களம்புகுந்த கேப்டன் ஹெதர் வாட்சனை 1 ஓட்டத்தில் வீழ்த்தினார் பூனம் யாதவ். இதனால் 16.1 ஓவர்களில் 63 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது இங்கிலாந்து.

ஆனால், 4-வது விக்கெட்டுக்கு இணைந்த சாரா டெய்லர் - நடாலி ஸ்கிவெர் இணை 83 ஓட்டங்கள் சேர்க்க, இங்கிலாந்து அணி சரிவிலிருந்து மீண்டது.

சாரா டெய்லர் 62 பந்துகளில் 45 ஓட்டங்கள் சேர்த்த நிலையில் கோஸ்வாமி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதையடுத்து வந்த ஃப்ரான் வில்சன் ரன் ஏதுமின்றி வெளியேற, நடாலி ஸ்கிவெர் 68 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 51 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

பின்னர் வந்த கேத்தரின் பிரன்ட் 42 பந்துகளில் 34 ஓட்டங்கள் சேர்த்து வெளியேற, கடைசிக் கட்டத்தில் ஜென்னி கன், லாரா மார்ஷ் ஜோடி ஓரளவு ஓட்டங்களைச் சேர்க்க, 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 228 ஓட்டங்கள் சேர்த்தது இங்கிலாந்து.

இந்தியத் தரப்பில் ஜூலான் கோஸ்வாமி 3 விக்கெட்டுகளை சாய்த்தார். பூனம் யாதவ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் பேட் செய்த இந்திய அணியில் வழக்கம்போல் இந்த முறையும் ஸ்மிருதி மந்தனா 4 பந்துகளைச் சந்தித்து ரன் ஏதுமின்றி ஷ்ரப்சோல் பந்துவீச்சில் போல்டு ஆனார்.

இதையடுத்து பூனம் ரெளத்துடன் இணைந்தார் கேப்டன் மிதாலி ராஜ். இந்த ஜோடி 38 ஓட்டங்கள் மட்டுமே சேர்த்தது. மிதாலி ராஜ் 31 பந்துகளில் 17 ஓட்டங்கள் சேர்த்த நிலையில் ரன் அவுட்டானார்.

இதையடுத்து பூனம் ரெளத்துடன் இணைந்தார் அதிரடி ஆட்டக்காரரான ஹர்மன்பிரீத் கெளர். இந்த ஜோடி அசத்தலாக ஆட, இந்தியா எளிதாக வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஹர்மன்பிரீத் 80 பந்துகளில் 2 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 51 ஓட்டங்கள் சேர்த்து ஆட்டமிழக்க, பூனன் ரெளத்துடன் இணைந்தார் வேதா கிருஷ்ணமூர்த்தி.

இந்த ஜோடியும் அசத்தலாக ஆடியதால் இந்தியா 191 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது பூனம் ரெளத் 86 ஓட்டங்கள் சேர்த்து ஆட்டமிழக்க அதுவே இங்கிலாந்துக்கு திருப்புமுனையாக அமைந்தது.

பின்னர் வந்த சுஷ்மா வர்மா டக் அவுட்டாக, வேதா கிருஷ்ணமூர்த்தி 34 பந்துகளில் 35 ஓட்டங்கள் சேர்த்து வெளியேறினார். இதன்பிறகு ஜூலான் கோஸ்வாமி ரன் ஏதுமின்றியும், ஷிகா பாண்டே 4 ரன்களிலும் நடையைக் கட்டினர்.

கடைசிக் கட்டத்தில் நம்பிக்கையளித்த தீப்தி சர்மா 14 ஓட்டங்களில் வெளியேற, பின்னர் வந்த ராஜேஷ்வரி கெய்க்வாட், ஷ்ரப்சோல் பந்துவீச்சில் போல்டு ஆனார்.

இதனால் 48.4 ஓவர்களில் 219 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது இந்தியா.

இங்கிலாந்து வீராங்கனை அன்யா ஷ்ரப்சோல் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இங்கிலாந்து அணிக்கு ரூ.4.25 கோடியும், இரண்டாவது இடம்பிடித்த இந்திய அணிக்கு ரூ.2.12 கோடியும் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.