இங்கிலாந்து அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என வெஸ்ட் இண்டீஸ் அணி வென்றது. 

இதையடுத்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடந்துவருகிறது. இதன் முதல் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் ஆடியது. 7 மாத இடைவெளிக்கு பிறகு மீண்டும் வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடம்பெற்ற அதிரடி மன்னன் கிறிஸ் கெய்லும் கேம்ப்பெல்லும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். கேம்பெல் 30 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பிறகு கெய்லுடன் ஜோடி சேர்ந்தார் ஷாய் ஹோப். இந்த ஜோடி பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக ஆடியது. 

சிறப்பாக ஆடிய ஹோப் அரைசதம் கடந்து 65 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பிறகு ஹெட்மயர் 20 ரன்களிலும் நிகோல்ஸ் பூரான் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் அபாரமாக ஆடிய கெய்ல் சதம் விளாசி செம கம்பேக் கொடுத்தார். 

135 ரன்களில் கெய்ல் ஆட்டமிழக்க, அதன்பிறகு டேரன் பிராவோ மற்றும் கடைசி நேரத்தில் நர்ஸ் ஆகியோரின் அதிரடியால் வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர் முடிவில் 360 ரன்களை குவித்தது. 

361 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் பேர்ஸ்டோ 34 ரன்களில் ஆட்டமிழந்தாலும் மற்றொரு தொடக்க வீரர் ஜேசன் ராயும் ஜோ ரூட்டும் இணைந்து அபாரமாக ஆடினர். இருவருமே அபாரமாக ஆடி சதமடித்தனர். 85 பந்துகளில் 15 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 123 ரன்களை குவித்து ராய் ஆட்டமிழந்தார். அதன்பிறகு ஜோ ரூட்டுடன் ஜோடி சேர்ந்த கேப்டன் இயன் மோர்கனும் சிறப்பாக ஆடினார். இந்த ஜோடி மூன்றாவது விக்கெட்டுக்கு 116 ரன்களை குவித்தது. சதம் விளாசிய ஜோ ரூட், 102 ரன்களில் ஹோல்டரின் பந்தில் ஆட்டமிழந்தார். 

இயன் மோர்கன் 65 ரன்களில் ஆட்டமிழக்க, பென் ஸ்டோக்ஸும் ஜோஸ் பட்லரும் இணைந்து போட்டியை வெற்றிகரமாக முடித்துவைத்தனர். கடினமான இலக்காக இருந்தாலும், சீரான வேகத்தில் இங்கிலாந்து அணி ரன்களை குவித்ததால் வெற்றி எளிதாக சாத்தியப்பட்டது. 49வது ஓவரின் நான்காவது பந்திலேயே இலக்கை எட்டி இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக ஜேசன் ராய் தேர்வு செய்யப்பட்டார். 

ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு அணி வெற்றிகரமாக விரட்டிய மூன்றாவது பெரிய இலக்கு இதுதான். 2006ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தென்னாப்பிரிக்க அணி விரட்டிய 435 ரன்கள் மற்றும் 2016ம் ஆண்டில் அதே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தென்னாப்பிரிக்கா 372 ரன்கள் ஆகிய இரண்டும் முதலிரண்டு இடங்களில் உள்ளது. இங்கிலாந்து மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.