காமன்வெல்த் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வாழ்த்துக் கடிதங்களுடன், ஊக்கத் தொகைகளை அறிவித்துள்ளார். 

அதன்ப்டி, மேசைப் பந்து வீரர் சத்தியன்: 

காமன்வெல்த் போட்டியில் மேசை பந்து விளையாட்டில் கலப்பு இரட்டையர் மற்றும் ஆடவர் இரட்டையர் பிரிவு போட்டிகளில் வெள்ளி, வெண்கலப் பதக்கங்களைப் பெற்றுள்ளீர்கள். காமன்வெல்த் போன்ற சர்வதேசப் போட்டிகளில் தங்கம் வெல்வோருக்கு ரூ.50 இலட்சமும், வெள்ளிப் பதக்கம் பெறுவோருக்கு ரூ.30 இலட்சமும், வெண்கலம் பெறுவோருக்கு ரூ.20 இலட்சமும் வழங்கப்படும் என்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

அந்த அறிவிப்பின்படி, தாங்கள் வெள்ளி, வெண்கலப் பதக்கங்கள் வென்றதால் ரூ.50 இலட்சம் ஊக்கத் தொகை பெறத் தகுதி படைத்துள்ளீர்கள். மேலும் பல வெற்றிகளைக்  குவித்து நாட்டுக்கும், தமிழகத்துக்கும் பெருமை சேர்க்க வேண்டும்.

அதேபோன்று, மேசைப் பந்து வீரர் சரத்கமல்: 

ஆடவர் இரட்டையர் பிரிவில் வெள்ளிப் பதக்கமும், ஆடவர் தனிநபர் பிரிவில் வெண்கலமும் வென்றுள்ளீர்கள். எனவே, தாங்கள் ரூ.50 லட்சம் பரிசுத் தொகை பெறத் தகுதி படைத்துள்ளீர்கள்.

இதேபோல ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா கார்த்திக்: 

ஸ்குவாஷ் மகளிர் இரட்டையர் பிரிவில் வெள்ளியும், ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவில் வெள்ளிப் பதக்கமும் பெற்று ரூ.60 இலட்சம் உயரிய ஊக்கத் தொகை பெற தகுதி பெற்றுள்ளீர்கள்.

மற்றொரு ஸ்குவாஷ் வீரர் சவுரவ் கோஷல்: கலப்பு இரட்டையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று ரூ.30 இலட்சம் பெற தகுதி பெற்றுள்ளீர்கள்.

இன்னொரு ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஸ்னா: 

மகளிர் இரட்டையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் பெற்று ரூ.30 இலட்சம் உயரிய ஊக்கத் தொகை பெற தகுதி படைத்துள்ளீர்கள். 

என்று  பதக்கம் பெற்றோருக்கு தனித்தனியே வாழ்த்துக் கடிதங்களை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அனுப்பியுள்ளார்.