தொடரை வெல்வது எந்த அணி என்பதை தீர்மானிக்கும் கடைசி ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணியின் டுபிளெசிஸ் மற்றும் டேவிட் மில்லர் ஆகிய இருவரும் அபாரமாக ஆடி சதமடித்து மிரட்டினர். 

தென்னாப்பிரிக்க அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரு டி20 போட்டி கொண்ட தொடரில் ஆடிவருகிறது. இதில் முதலில் ஒருநாள் தொடர் நடந்துவருகிறது. முதலிரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்றிருக்கின்றன. 

இந்நிலையில், மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பவுலிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரர்கள் டி காக் மற்றும் ஹெண்டிரிக்ஸ் ஆகிய இருவரும் ஒற்றை இலக்கங்களில் வெளியேறினர். இவர்களை தொடர்ந்து மார்க்ரமும் 32 ரன்களில் ஆட்டமிழந்தார். 55 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்தது தென்னாப்பிரிக்க அணி. 

அதன்பிறகு தென்னாப்பிரிக்க கேப்டன் டுபிளெசிஸ் மற்றும் டேவிட் மில்லர் ஆகிய இருவரும் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை மீட்டெடுத்தனர். இருவருமே விக்கெட்டை விட்டுக்கொடுக்காமல் அதேநேரத்தில் சீரான வேகத்தில் ரன்களையும் சேர்த்தனர். அபாரமாக ஆடிய இருவருமே சதமடித்தனர். 

16வது ஓவரிலிருந்து 49வது ஓவர் வரை இருவரும் களத்தில் நின்று ஆடினர். நான்காவது விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 252 ரன்களை குவித்தனர். டுபிளெசிஸ் 125 ரன்களையும் டேவிட் மில்லர் 139 ரன்களையும் குவித்தனர். 50 ஓவர் முடிவில் தென்னாப்பிரிக்க அணி 320 ரன்களை குவித்தது. 

இதையடுத்து 321 ரன்கள் என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி ஆடிவருகிறது.