சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பாகிஸ்தானுடன் விளையாடுவதற்கு இந்தியா தயாராக உள்ளதா? இல்லையா? என்பதை தெளிவுபடுத்துமாறு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் (பிசிசிஐ), பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து, அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகக் குழு தலைவர் நஜம் சேத்தி, “ஆஸ்திரேலியத் தலைநகர் கேப்டவுனில் நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) கூட்டத்தின்போது பிசிசிஐ தலைவர் அனுராக் தாக்குரை சந்தித்தேன். அப்போது, இருதரப்பு கிரிக்கெட் போட்டிகள் அல்லது ஐசிசியின் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளின்போது பாகிஸ்தானுடன் விளையாட இந்தியா விருப்பம் கொண்டுள்ளதா? இல்லையா? என கேட்டேன். அதற்கு நேரடியாக பதிலளிக்காத அவர், சில யோசனைகளை தெரிவித்தார். அதுகுறித்து தற்போது பேசுவது சரியாக இருக்காது.
இரதரப்பு கிரிக்கெட் ஒப்பந்தங்களின்படி இந்தியா எங்களுடன் போட்டிகளில் விளையாடாத காரணத்தால் கடந்த 9 ஆண்டுகளாக பெரும் நஷ்டத்தை சந்தித்து வருவதையும், அதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வளர்ச்சிக்கான திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதையும் ஐசிசி உறுப்பினர்களிடம் தெரிவித்தேன்.
இருதரப்பு கிரிக்கெட் ஒப்பந்தங்கள் குறித்து ஆய்வு செய்ய கமிட்டி உறுப்பினர்கள் அடங்கிய குழுவை அமைப்பதாக ஐசிசி தெரிவித்தது. அதனால் எந்தப் பலனும் இல்லை என்பதை தெரிவித்ததுடன், பிசிசிஐ தனது முடிவை தெளிவுபடுத்த வேண்டுமென கேட்டோம். அதற்கும் தாக்குர் எந்த பதிலும் தெரிவிக்கவில்லை.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டியில், எங்களுக்கு எதிரான ஆட்டங்களில் இந்தியா விளையாட விரும்பவில்லை என்றால், ஆட்டத்தை இந்தியா விட்டுக்கொடுத்ததாக அறிவித்து, ஆட்டத்துக்கான புள்ளிகள் எங்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
இருதரப்பு போட்டிகளில் இந்தியா விளையாடாததற்காக, இழப்பீடு வழங்குவதாக ஐசிசி தெரிவித்தது. அது, கடனாகவோ, நிதி ஒதுக்கீடாகவோ இருக்கக் கூடாது என்று தெரிவித்துள்ளோம் என்று நஜம் சேத்தி கூறினார்.
