ஆசிய சாம்பியன்ஷிப் டிராபி ஹாக்கி போட்டியில் பெற்றுள்ள வெற்றி இந்திய இராணுவத்தினருக்கு தீபாவாளி பரிசாகும் என்று இந்திய ஹாக்கி அணி கேப்டன் ஸ்ரீஜேஷ் தெரிவித்தார்.

போட்டிக்குப் பிறகு மலேசியாவில் இருந்து, திங்கள்கிழமை நள்ளிரவில் இந்திய அணி நாடு திரும்பியது.

பெங்களூரு கெம்பகெளடா விமான நிலையத்துக்கு வந்தபோது ஸ்ரீஜேஷ் செய்தியாளர்களிடம், “ஆசிய சாம்பியன்ஷிப் டிராபி ஹாக்கிப் போட்டியில் பெற்றுள்ள வெற்றியானது, இந்திய இராணுவ வீரர்களுக்கான தீபாவளி பரிசாகும். எல்லையைப் பாதுகாக்கும் நமது வீரர்கள், இதர பதக்கங்களைக் காட்டிலும் இந்தப் பதக்கத்துக்காக நிச்சயம் மகிழ்ச்சி அடைவார்கள்.

அத்துடன், உரியில் நிகழ்த்தப்பட்ட எல்லை தாண்டிய தீவிரவாத தாக்குதலில் பலியான இந்திய ராணுவத்தினரின் குடும்பத்திற்கும் இந்த வெற்றியை பரிசாக்குகிறோம்.
இறுதிச் சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தின்போது இந்திய வீரர்கள் உணர்வுப்பூர்வமாக விளையாடியதை உணர முடிந்தது. அதேவேளையில், அந்த உணர்வுகள் தங்களை முழுமையாக ஆக்கிரமித்துக் கொள்ளாமலும் அவர்கள் பார்த்துக்கொண்டனர்.

களத்தில் விளையாடும்போது இதர விவகாரங்களை தவிர்த்து ஆட்டத்தில் மட்டுமே அவர்கள் கவனம் செலுத்தினர். விளையாட்டுப் போட்டி என்பது நன்றாகச் செயல்படுவது, வெற்றியை கைப்பற்றுவது என்பதையும் உணர்ந்திருந்தனர்.

இறுதிப் போட்டியின்போது சர்ச்சைகளை தவிர்ப்பதற்காக, சமூக ஊடகங்களிலும் எந்தவித கருத்துக்களையும் வீரர்கள் பதிவு செய்யவில்லை.
அணியில் பல இளம் வீரர்கள் இருந்தபோதும், களத்தில் அவர்கள் முதிர்ச்சியுடன் செயல்பட்டனர்.

அதனாலேயே, இந்த போட்டியில் சிறப்பாகச் செயல்பட முடிந்தது என்று ஸ்ரீஜேஷ் கூறினார்.
"ஆஸ்திரேலிய டெஸ்டில் பங்கேற்பது உறுதியில்லை': இதனிடையே, ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டெஸ்ட் ஹாக்கி தொடரில் தான் பங்கேற்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றும் ஸ்ரீஜேஷ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர், "ஆசிய சாம்பியன்ஷிப் டிராபி போட்டியின்போது காயம் ஏற்பட்டது. மருத்துவர்களிடம் அதை பரிசோதிக்க வேண்டியுள்ளது. அதைத் தொடர்ந்தே ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டெஸ்ட் ஹாக்கி தொடரில் பங்கேற்பது குறித்து உறுதியாகக் கூற முடியும்' என்றார்.

இந்திய ஹாக்கி அணி அடுத்ததாக, 4 நாடுகள் பங்கேற்கும் ஹாக்கி, அதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் ஹாக்கி தொடர் ஆகிய போட்டிகளில் விளையாட உள்ளது.