ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மெல்போர்னில் நேற்று நடந்த இரண்டாவது டி20 போட்டியில் தினேஷ் கார்த்திக் குல்லா அணிந்து ஆடியது, நெட்டிசன்களுக்கு நல்ல டைம் பாசாக அமைந்துள்ளது. 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோற்றது. இதையடுத்து நேற்று மெல்போர்னில் இரண்டாவது டி20 போட்டி நடந்தது. இந்த போட்டியிலும் மழை குறுக்கிட்டதோடு, நீண்டநேரம் மழை நிற்காததால் போட்டி கைவிடப்பட்டது. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 19 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்த நிலையில் மழை வந்தது. அதன்பிறகு விட்டுவிட்டு மழை வந்து கொண்டேயிருந்ததால் முடிவின்றி போட்டி கைவிடப்பட்டது.

இந்த போட்டி இந்திய அணி வென்றிருக்க வேண்டிய போட்டி. இந்திய பவுலர்கள் அபாரமாக பந்துவீசி ஆஸ்திரேலிய அணியை சுருட்டினர். எனினும் மழையால் இந்திய அணியின் வெற்றி பாதிக்கப்பட்டது.

மெல்போர்னில் நேற்று கடும் குளிராக இருந்தது. 25 டிகிரி செல்ஸியக்கும் குறைவாகவே இருந்தது வெப்பநிலை. அதிகமான குளிர் இந்திய வீரர்களை அசௌகரியமாக்கியது. தினேஷ் கார்த்திக் குளிரிலிருந்து தற்காத்துக்கொள்ள குல்லா அணிந்து ஃபீல்டிங் செய்தார். குல்லா அணிந்தபடியே மார்கஸ் ஸ்டோய்னிஸின் கேட்ச்சை பிடித்தார். இதைக்கண்ட நெட்டிசன்கள் கிண்டலான மற்றும் சீரியஸான பல கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். 

அதில் ஒருவர், ஆஸ்திரேலியாவில் குல்லாவுடன் கேட்ச் செய்த முதல் வீரர் தினேஷ் கார்த்திக் தான் என்று பதிவிட்டுள்ளார். இதுபோன்ற பல பதிவுகள் இடப்பட்டுவருகின்றன.