நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் விக்கெட் கீப்பரான தினேஷ் கார்த்திக், ஃபீல்டிங் செய்து அபாரமான கேட்ச் ஒன்றை பிடித்தார். 

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி, 219 ரன்களை குவித்தது. 220 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, பேட்டிங்கில் படுமோசமாக சொதப்பியது. இந்திய வீரர்கள் மளமளவென விக்கெட்டுகளை இழக்க, 19.2 ஓவரில் வெறும் 139 ரன்களுக்கே இந்திய அணி ஆல் அவுட்டானது. 

இதையடுத்து 80 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி, 1-0 என டி20 தொடரில் முன்னிலை வகிக்கிறது. டி20 கிரிக்கெட்டில் இந்திய அணியின் மிகப்பெரிய தோல்வி இதுதான். 

இந்த போட்டியில் இந்திய அணி தோனி, தினேஷ் கார்த்திக், ரிஷப் பண்ட் ஆகிய மூன்று விக்கெட் கீப்பர்களுடன் களமிறங்கியது. தோனி தான் விக்கெட் கீப்பர். மற்ற இருவரும் பேட்ஸ்மேன்களாக அணியில் சேர்க்கப்பட்டிருந்தனர். விக்கெட் கீப்பர்கள் ஃபீல்டிங் செய்வது எளிதான காரியம் அல்ல. எனினும் இந்திய அணியின் பேட்டிங் வரிசைக்கு தினேஷ் மற்றும் ரிஷப்பின் தேவை இருப்பதால் அவர்கள் அணியில் சேர்க்கப்படுகின்றனர். 

இன்றைய போட்டியில் 2 கேட்ச்களை தவறவிட்டார் தினேஷ் கார்த்திக். ஆனால் ஒரே ஒரு கேட்ச்சை பிடித்தாலும் அபாரமாக பிடித்தார் தினேஷ் கார்த்திக். லாங் ஆன் திசையில் பவுண்டரி லைனில் அபாரமாக கேட்ச் செய்தார் தினேஷ். ஹர்திக் வீசிய 15வது ஓவரின் கடைசி பந்தை மிட்செல் தூக்கி அடிக்க, லாங் ஆன் திசையில் நின்ற தினேஷ் கார்த்திக் பந்தை பிடித்தார். ஆனால் பேலன்ஸ் இல்லாமல் பவுண்டரி லைனை மிதிக்கப்போன தினேஷ், அதற்கு முன்பாக பந்தை தூக்கிப்போட்டு பின்னர் மீண்டும் அந்த பந்தை கேட்ச் செய்து அசத்தினார். ஒரு விக்கெட் கீப்பர் இப்படியான கேட்ச்சை பிடிப்பது பெரிய விஷயம்தான். அந்த வீடியோ இதோ..