ஒரு ஆட்டத்தை வெற்றிகரமாக எப்படி முடிக்க வேண்டும் என்பதை தோனியிடமிருந்து கற்றுக்கொண்டதாக தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நடந்த முத்தரப்பு டி20 தொடரின் இறுதி போட்டியில் தினேஷ் கார்த்திக்கின் மிரட்டலான ஆட்டத்தால், வங்கதேசத்தை வீழ்த்தி இந்திய அணி த்ரில்லர் வெற்றி பெற்றது. 

இரண்டு ஓவருக்கு 34 ரன்கள் என்ற இக்கட்டான நிலை இருந்தது. 19வது ஓவரில் 22 ரன்கள் குவித்தார் தினேஷ் கார்த்திக். கடைசி ஓவரின் கடைசி பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து இந்திய ரசிகர்களை மட்டுமல்லாது, வங்கதேசத்துக்கு எதிரான இலங்கை ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினார் தினேஷ் கார்த்திக்.

போட்டிக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தினேஷ் கார்த்திக், இதுபோன்ற ஆட்டத்தை வெற்றிகரமாக முடிக்கும் திறமை, அனுபவத்தின் பலனாகக் கிடைப்பது. இத்திறமைகளை விலைக்கு வாங்க முடியாது. அனுபவத்தின் வாயிலாகத்தான் கற்றுக்கொள்ள முடியும். இதுபோன்ற இக்கட்டான தருணங்களை பதற்றப்படாமல் நிதானமாக கையாள வேண்டும். இதற்கு தோனியின் ஆட்டங்கள் சிறந்த உதாரணங்கள். நெருக்கடி நிலைகளை கையாள்வதை தோனி போன்றவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள முடியும். ஒரு ஆட்டத்தை எப்படி வெற்றிகரமாக முடிக்க வேண்டும் என்பதை தோனியிடமிருந்துதான் கற்றுக்கொண்டேன் என தினேஷ் கார்த்திக் கூறினார்.