Dinesh Karthik returned to the Indian team three years later

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கவுள்ள இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் மூன்று வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இடம் பிடித்துள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா அணிக்காக விளையாடி வந்த மணீஷ் பாண்டே, ஐதராபாதுக்கு எதிரான வெளியேற்றும் சுற்றாட்டத்திற்கு முன்னதாக பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவருக்கு காயம் ஏற்பட்டது.

அதனால், சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கவுள்ள இந்திய அணியில் இருந்து மணீஷ் பாண்டே காயம் காரணமாக விலகியதால் அவருக்குப் பதிலாக தமிழகத்தைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டுள்ளார்.

2004-இல் ஒரு நாள் கிரிக்கெட்டில் அறிமுகமான தினேஷ் கார்த்திக், இதுவரை 71 ஒரு நாள் ஆட்டங்களில் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார்.

2013 சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் விளையாடிய இந்திய அணியிலும் அவர் இடம்பெற்றிருந்தார்.

2014-இல் வங்கதேசத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடிய கார்த்திக், அதன்பிறகு இப்போதுதான் இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார்.

2016-17 ரஞ்சி சீசனில் 704 ரன்கள் குவித்ததோடு, விஜய் ஹசாரே டிராபி, தியோதர் டிராபி ஆகியவற்றில் 854 ரன்கள் குவித்தார்.

10-ஆவது ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்காக விளையாடிய கார்த்திக், 361 ஓட்டங்கள் குவித்தார். உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக ஆடியதன் அடிப்படையில் இப்போது இந்திய அணியில் மீண்டும் இடம்பிடித்திருக்கிறார் கார்த்திக் என்பது குறிப்பிடத்தக்கது.