நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் தினேஷ் கார்த்திக் செய்த தவறு பெரிய பாதிப்பை ஏற்படுத்தாமல் கலீல் அகமது பார்த்துக்கொண்டார். இல்லையெனில் விளைவு வேறு மாதிரியாக இருந்திருக்கும். 

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்ததால் நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் ஆடியது. தொடக்கம் முதலே அதிரடியாக ஆடிய அந்த அணி, 20 ஓவர் முடிவில் 219 ரன்களை குவித்தது. 220 ரன்கள் என்ற இலக்கை இந்திய அணி விரட்டிவருகிறது. 

நியூசிலாந்து அணி போன வேகத்திற்கு அந்த அணியின் ஸ்கோர் இன்னும் அதிகமாக உயர்ந்திருக்கும். ஆனால் அந்த அணியின் தொடக்க வீரர் சேஃபெர்ட்டின் விக்கெட் விழுந்த பிறகுதான் இந்திய அணி போட்டிக்குள் வந்தது. தொடக்கம் முதலே அடித்து ஆடிய சேஃபெர்ட், எல்லா பந்தையுமே அடித்து ஆட முயன்றார். அரைசதம் கடந்த பிறகு அனைத்து பந்துகளையும் அடித்தார். அவர் களத்திற்கு நின்றபோது அந்த அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. 

அடித்து ஆடிக்கொண்டிருந்த சேஃபெர்ட் இடையில் ஒரு கேட்ச் கொடுத்தார். அந்த கேட்ச்சை தினேஷ் கார்த்திக் தவறவிட்டார். இந்திய அணியை மிரட்டிக்கொண்டிருந்த ஒரு வீரரின் கேட்ச்சை தினேஷ் கார்த்திக் விட்டது, பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும். அந்த வாய்ப்பை பயன்படுத்தி அவர் தொடர்ந்து அடித்து ஆடினார். ஆனால் பெரிய இன்னிங்ஸாக மாற்ற தவறிவிட்டார். 43 பந்துகளில் 7 பவுண்டரிகள், 6 சிக்ஸர்களுடன் 84 ரன்கள் குவித்த அவரை கலீல் அகமது போல்டாக்கி அனுப்பினார். 

11வது ஓவரின் கடைசி பந்தில் தினேஷ் கார்த்திக், சேஃபெர்ட்டிற்கு கேட்ச்சை விட்ட நிலையில், 13வது ஓவரிலேயே அவரது விக்கெட்டை கலீல் வீழ்த்திவிட்டார். இல்லையெனில் அவர் சதமடித்து தொடர்ந்து அடித்து ஆடியிருந்தால், அந்த அணி இமாலய ஸ்கோரை எட்டியிருக்கும். இதுவே அதிகமான ஸ்கோர் எனும்போது, ஒருவேளை அவர் நின்றிருந்தால் இன்னும் அதிகமான ஸ்கோராகியிருக்கும்.