கும்ப்ளேவை பயிற்சியாளர் பதவியிலிருந்து நீக்குமாறு பிசிசிஐ சி.இ.ஓவிற்கு தொடர்ச்சியாக மெசேஜ் அனுப்பி கோலி தொல்லை கொடுத்ததாக பிசிசிஐ நிர்வாகக்குழு உறுப்பினர் டயானா எடுல்ஜி தெரிவித்துள்ளார். 

இந்திய மகளிர் அணிக்கு புதிய பயிற்சியாளரை தேர்வு செய்யும் விவகாரத்தால், பழைய சம்பவங்களை எல்லாம் அவிழ்த்து விட்டுள்ளார் டயானா. 

இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் அனில் கும்ப்ளே மற்றும் கேப்டன் விராட் கோலி ஆகிய இருவருக்கும் இடையே நடந்த பனிப்போர் அனைவரும் அறிந்ததே. கும்ப்ளே பயிற்சியாளராக நீடிப்பதை விரும்பாத விராட் கோலி, பிசிசிஐ-க்கு நெருக்கடி கொடுத்து ரவி சாஸ்திரியை பயிற்சியாளராக நியமிக்க ஆதரவு தெரிவித்து, அதை அடையவும் சென்றார். இந்த சம்பவம் அனைவரும் அறிந்ததே. ஆனால் அவர் கும்ப்ளேவை நீக்கச்சொல்லி பிசிசிஐ சி.இ.ஓவிற்கு தொடர்ச்சியாக மெசேஜ் செய்து தொல்லை கொடுத்துள்ளார். இந்திய மகளிர் அணிக்கு பயிற்சியாளரை நியமிக்கும் விவகாரத்தில் இந்த தகவலை அம்பலப்படுத்தியுள்ளார் டயானா. 

இந்திய மகளிர் அணியின் பயிற்சியாளர் ரமேஷ் பவாரின் பதவிக்காலம் கடந்த நவம்பர் 30ம் தேதியுடன் முடிவடைந்தது. அண்மையில் நடந்த மகளிர் டி20 உலக கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில் சீனியர் வீராங்கனை மிதாலி ராஜை அணியில் சேர்க்காதது கடும் சர்ச்சையை கிளப்பியது. மிதாலி ராஜ் ஆடாத அந்த போட்டியில் தோற்று இந்திய அணி தொடரை விட்டு வெளியேறியதால் பிரச்னை பெரிதாக வெடித்தது. இந்த விவகாரத்தில் ரமேஷ் பவார் மற்றும் மிதாலி ராஜ் ஆகிய இருவருக்கும் இடையே மோதல் மூண்டது. இதுகுறித்து இருவரிடமும் பிசிசிஐ தனித்தனியாக விசாரணை நடத்தியது. இதையடுத்து புதிய பயிற்சியாளருக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. வரும் 20ம் தேதி புதிய பயிற்சியாளருக்கான நேர்காணலை கபில் தேவ் தலைமையிலான மூவர் கொண்ட குழு நடத்தி புதிய பயிற்சியாளரை தேர்வு செய்ய உள்ளது. 

இதற்கிடையே ரமேஷ் பவாரே பயிற்சியாளர் பதவியில் நீடிக்க வேண்டும் என மகளிர் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் மற்றும் துணை கேப்டன் மந்தனா ஆகிய இருவரும் பிசிசிஐ நிர்வாகக்குழுவிற்கு கடிதம் எழுதினர். இவர்களின் கோரிக்கையை ஏற்று ரமேஷ் பவாருக்கு பதவி நீட்டிப்பு வழங்க வேண்டும் என நிர்வாகக்குழு உறுப்பினர் டயானா எடுல்ஜி, நிர்வாகக்குழு தலைவர் வினோத் ராய்க்கு வலியுறுத்தினார். ஆனால் அதை ஏற்க வினோத் ராய் மறுத்துவிட்டார். 

இதையடுத்து இந்திய ஆண்கள் அணிக்கு ஒரு நியாயம், மகளிர் அணிக்கு ஒரு நியாயமா என தெளிவான கேள்வியை முன்வைத்து சரமாரியாக தாக்கியுள்ளார் டயானா. இதுகுறித்து கடிதம் எழுதியுள்ள டயானா, இந்திய ஆண்கள் அணியின் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து கும்ப்ளேவை விடுவிக்குமாறு பிசிசிஐ சி.இ.ஓவிற்கு தொடர்ச்சியாக மெசேஜ்களை அனுப்பினார் விராட் கோலி. இறுதியில் அவர் நினைத்ததை சாதித்தும் விட்டார். அவரது பேச்சுக்கு மதிப்பளித்து கும்ப்ளேவை நீக்கிவிட்டு ரவி சாஸ்திரி பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். கேப்டனின் கருத்துக்கு மதிப்பளிப்பதில்லை என்றால் விராட் கோலியின் கருத்துக்கு செவி மடுத்திருக்க கூடாது. ஆனால் கோலியின் கோரிக்கை ஏற்கப்பட்டது.

மகளிர் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், ரமேஷ் பவாரை பயிற்சியாளராக நீடிக்க வேண்டும் என கடிதம் எழுதியுள்ளார். கோலியின் கருத்து ஏற்கப்பட்ட நிலையில், கவுரின் கருத்து ஏற்கப்படவில்லை. கோலி போன்று இவர்கள் தொடர்ச்சியாக மெசேஜ் செய்து தொல்லை செய்யவில்லை. டீசண்ட்டாக ஒரு இமெயில் செய்தனர். கோலி விஷயத்தில் நடந்துகொண்டு சரி என்றால், மகளிர் அணியின் விஷயத்திலும் அப்படித்தானே நடந்துகொள்ள வேண்டும் என டயானா அதிரடியாக தெரிவித்துள்ளார்.