அதிவேக ஸ்டம்பிங், சமயோசித ரன் அவுட்டுகள், அபாரமான கேட்ச்கள் என விக்கெட் கீப்பிங்கில் மிரட்டுபவர் தோனி. அத்துடன் இல்லாமல், எதிரணி வீரர்களின் பேட்டிங் உத்திகளை அறிந்து, அவர்களின் பிளஸ், மைனஸ்களை தெரிந்துகொண்டு அதற்கேற்றபடி பவுலர்களுக்கு ஆலோசனைகளை வழங்குவதோடு ஃபீல்டிங் செட்டப்பிலும் உதவுவார். பவுலர்கள் எந்த திட்டமும் இல்லாமல் நிராயுதபாணியாக இருக்கும்போதெல்லாம் தோனிதான் அவர்களுக்கு அனைத்துமாக திகழ்கிறார். 

குல்தீப், சாஹல் ஆகிய இந்திய அணியின் பிரைம் ஸ்பின்னர்கள் மட்டுமல்லாமல் பார்ட் டைம் ஸ்பின்னரான கேதர் ஜாதவிற்கும் எந்த பேட்ஸ்மேனுக்கு எப்படி பந்துவீச வேண்டும் என்ற ஆலோசனைகளை வழங்குவார். அவரது ஆலோசனைகள் இந்திய அணிக்கு திருப்புமுனையை ஏற்படுத்தி கொடுக்கும். ஏற்கனவே பலமுறை இப்படியான திருப்புமுனைகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளன. 

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களான சேஃபெர்ட் மற்றும் முன்ரோ அகிய இருவரும் அதிரடியாக ஆடி அபாரமான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். தொடக்க ஜோடியை பிரிக்க முடியாமல் இந்திய பவுலர்கள் திணறினர். முதல் நான்கு ஓவர்களில் புவனேஷ்வர் குமார் மற்றும் கலீல் அகமதுவின் பந்துவீச்சை நியூசிலாந்து தொடக்க ஜோடி பிரித்து மேய்ந்ததை அடுத்து குருணல் பாண்டியாவை பந்துவீச அழைத்தார் கேப்டன் ரோஹித் சர்மா. 

குருணல் பாண்டியா, ஹர்திக் பாண்டியா ஆகியோரின் பவுலிங்கையும் அடித்து நொறுக்கினர். ஒருவழியாக குருணல் பாண்டியாதான் அந்த ஜோடியை பிரித்தார். குருணல் தனது மூன்றாவது ஓவரை வீசுவதற்கு முன்பு தோனியுடன் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தார். தோனி எப்படி பந்துவீச வேண்டும் என்ற ஆலோசனைகளை வழங்கினார். அதன்பின்னர் குருணல் வீசிய பந்தில் முன்ரோ ஆட்டமிழந்தார். தோனி கேப்டனாக இல்லாவிட்டாலும் மறைமுக கேப்டனாகவே திகழ்ந்து கொண்டிருக்கிறார்.