ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றில் இந்தியா ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி டிராவில் முடிந்தது. சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளை வீழ்த்தி ஏற்கனவே இந்திய அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றதால், ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்த தொடரில் இதுவரை ஆடாத வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது.

ரோஹித், தவான், புவனேஷ்வர் குமார், பும்ரா, சாஹல் ஆகியோர் ஆடவில்லை. அவர்களுக்கு பதிலாக ராகுல், மனீஷ் பாண்டே, தீபக் சாஹர், கலீல் அகமது, சித்தார்த் கவுல் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டிருந்தனர். கேப்டன் ரோஹித்தும் துணை கேப்டன் தவானும் இல்லாததால் கேப்டன்சியை தோனி கவனித்துக்கொண்டார்.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஃப்கானிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் 252 ரன்களை எடுத்தது. 253 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணி டிரா செய்தது. 2 பந்துகளில் ஒரு ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், ஜடேஜா தூக்கி அடித்து அவுட்டானார். இதையடுத்து போட்டி டிரா ஆனது.

நெருக்கடியான சூழல்களிலும் டென்ஷனாகாமல் கூலாக அணுகும் தோனி, கேப்டன் கூல் என்று அழைக்கப்பட்டார். மிகவும் அரிதாகத்தான் கோபப்படுவார். அதையும் முழுமையாக வெளிக்காட்ட மாட்டார். ஒன்றரை ஆண்டுக்கு பிறகு மீண்டும் ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கேப்டனாக செயல்பட்ட தோனி, சில சமயங்களில் கோபப்பட்டதை பார்க்க முடிந்தது. 

குல்தீப் யாதவ் ஃபீல்டிங்கில் மாற்றங்கள் கோரியபோது, பவுலிங் போடுகிறாயா? பவுலரை மாற்றவா? என்று கேட்டார். அதேபோலவே அந்த போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணியின் பேட்டிங்கின்போது தினேஷ் கார்த்திக் தேவையில்லாமல் ஒரு ஓவர்த்ரோ விட்டார். அப்போதும் தினேஷ் கார்த்திக்கிடம் தோனி தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.