dhoni opinion about using players in match

செய்தியாளர்களுடனான சந்திப்பின்போது, கடுமையான கேள்விகளுக்குக் கூட தனக்கே உரித்தான நகைச்சுவை பாணியில் பதிலளித்து கேள்வி கேட்டவர்களிடமிருந்தே பதிலை பெறுவதில் தோனி வல்லவர்.

செய்தியாளர்கள் சந்திப்பின்போது, எந்த மாதிரியான கேள்விகளுக்கும் கோபப்படாமல், கூலாகவே தோனி பதிலளிப்பார். களத்தில் கோபமோ பதற்றமோ படாமல் நிதானமாக வீரர்களை கையாண்டு வெற்றியை பறிக்கும் தோனி, கேப்டன் கூல் என அழைக்கப்படுகிறார். களத்தில் இருப்பதை போலத்தான் செய்தியாளர்கள் சந்திப்பிலும், எந்த சூழலிலும் எந்த மாதிரியான கேள்விகளுக்கும் தோனி கோபப்படுவதில்லை.

ஐபிஎல் 11வது சீசனின் இறுதி போட்டி இன்று நடைபெற உள்ள நிலையில், இறுதி போட்டியில் மோதும் சென்னை மற்றும் ஹைதராபாத் அணிகளின் கேப்டன்கள் மற்றும் பயிற்சியாளர்கள் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.

அப்போது, ஹைதராபாத் அணிக்கு எதிரான முதல் தகுதி சுற்று போட்டியில் ஹர்பஜன் சிங்கிற்கு பவுலிங் வாய்ப்பு கொடுக்கப்படாதது குறித்து ஒரு கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த தோனி, என் வீட்டில் நிறைய கார்களும் பைக்குகளும் உள்ளன. அதற்காக அனைத்தையும் ஒரே நேரத்தில் ஓட்ட முடியாது. அதேபோலத்தான்.. அணியில் 6 முதல் 7 பவுலர்கள் உள்ளனர். அனைவருக்கும் அனைத்து போட்டிகளிலும் வாய்ப்புகள் வழங்க முடியாது. ஒரு குறிப்பிட்ட போட்டியில் அப்போது களத்தில் இருக்கும் வீரர் மற்றும் சூழல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, அந்த நேரத்தில் யார் வீசுவது சரியாக இருக்குமோ அவரைத்தான் பவுலிங்கிற்கு அழைக்க முடியும். எந்தவொரு தனிப்பட்ட நபருக்காகவும் வாய்ப்பு கொடுக்க முடியாது. அணியின் நலனை கருத்தில் கொண்டுதான் களத்தில் எடுக்கப்படும் ஒவ்வொரு முடிவும் அமையும். எந்த நேரத்தில் யார் தேவையோ அதற்கேற்றாற்போல் தான் பயன்படுத்த முடியும் என தோனி பதிலளித்தார்.