dhoni opinion about ambati rayudu
ராயுடுவின் திறமை மீது உயர்ந்த மதிப்பு வைத்திருப்பதாக சென்னை அணி கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 46வது லீக் போட்டியில் சென்னை அணியும் ஹைதராபாத் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை கேப்டன் தோனி, முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்தது.
180 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியின் தொடக்க வீரர்கள் ராயுடுவும் வாட்சனும் நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். அதிரடியாக ஆடி சதமடித்த ராயுடு, கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்து சென்னை அணியை வெற்றியடைய செய்தார். ஆட்டநாயகனாகவும் ராயுடு தேர்வானார்.

போட்டிக்கு பின் பேசிய சென்னை கேப்டன் தோனி, ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் பந்து அதிகமாக ஸ்விங் ஆகும் என நினைத்தேன். ஆனால் அப்படி ஸ்விங் ஆகாதது, பெரிய ஆச்சரியமாக இருந்தது. ராயுடுவும் வாட்சனும் சிறந்த தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் பவுண்டரிகள் அடித்தனர்.

அதனால்தான் ஹைதராபாத்தை வீழ்த்த முடிந்தது. இல்லையெனில் ஹைதராபாத்துக்கு எதிராக 180 என்ற இலக்கை விரட்டுவது எளிதான காரியம் அல்ல. ராயுடு மீதும் அவரது திறமை மீதும் உயர்ந்த மதிப்பு வைத்திருக்கிறேன். அதனால் ஐபிஎல் தொடங்குவதற்கு முன்பாகவே அணியில் ராயுடுவிற்கு இடத்தை உறுதி செய்துவிட்டேன்.

வேகப்பந்து, ஸ்பின் ஆகிய இரண்டையுமே திறமையாக ஆடக்கூடியவர் ராயுடு. தொடக்க வீரர்களை ஸ்பின்னர்களை வைத்து அவுட்டாக்க பெரும்பாலான அணிகள் திட்டமிடும். ஆனால் ராயுடுவை அப்படி ஆட்டமிழக்க செய்ய முடியாது. அவர் இரண்டு பந்துகளையுமே ஆடக்கூடியவர். அவரை பார்த்தால் அதிரடி பேட்ஸ்மேனை போன்று தெரியாது. ஆனால், சிறந்த ஷாட்களை ஆடக்கூடியவர் என புகழ்ந்தார்.
