இந்திய அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவான், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் அபாரமாக ஆடி தொடர் நாயகன் விருதை வென்றார். 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை கடைசி போட்டியில் வென்று இந்திய அணி 1-1 என சமன் செய்தது. முதல் போட்டியில் டக்வொர்த் முறைப்படி ஆஸ்திரேலிய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இரண்டாவது போட்டி மழையால் முடிவின்றி கைவிடப்பட்டது. இதையடுத்து சிட்னியில் நேற்று நடந்த மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது. 

இந்த தொடரின் இரண்டு போட்டிகளிலுமே தவான் அபாரமாக பேட்டிங் செய்தார். முதல் போட்டியில் 76 ரன்களையும் மூன்றாவது போட்டியில் 41 ரன்களையும் குவித்தார். நேற்று நடந்த போட்டியில் 165 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் தவான், தொடக்கம் முதலே அடித்து ஆடினார். 22 பந்துகளில் 41 ரன்களை குவித்து பின்வரிசை வீரர்களின் வேலையை எளிதாக்கினார். தவானின் இந்த அதிரடி ஆட்டம்தான் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியமான விஷயமாக திகழ்ந்தது. இரண்டு போட்டிகளிலும் சிறப்பாக ஆடி தொடர் நாயகன் விருதையும் வென்றார் தவான். 

பொதுவாக கேட்ச் பிடித்தால் ரசிகர்களை நோக்கி தொடையை தட்டி மகிழ்ச்சியை கொண்டாடும் தவான், நேற்றைய போட்டியில் கேட்ச் எதுவும் பிடிக்கவில்லை. எனினும் போட்டி முடிந்து தொடர் நாயகன் விருதை பெற மேடைக்கு சென்ற தவான், மேடையில் நின்ற சிறுவனை தூக்கி விளையாடினார். பின்னர் தொடர் நாயகன் விருதுடன் ரசிகர்களை நோக்கி தொடையை தட்டி தனது அக்மார்க் கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினார்.