வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஷிகர் தவான் சேர்க்கப்பட வாய்ப்பில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய அணி இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு ஆசிய கோப்பை தொடரில் ஆடிவருகிறது. 14வது ஆசிய கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்துவருகிறது. ஆசிய கோப்பை தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. நாளை இந்தியா வங்கதேசம் அணிகளுக்கு இடையே இறுதி போட்டி நடக்கிறது. அத்துடன் ஆசிய கோப்பை முடிவடைகிறது.

அதற்கு பிறகு வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடரில் இந்திய அணி ஆட உள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வெஸ்ட் இண்டீஸ் அணி 2 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் 3டி20 போட்டிகளில் கலந்துகொண்டு ஆடுகிறது. வெஸ்ட் இண்டீஸ் தொடர் முடிந்ததும் ஆஸ்திரேலியா சென்று இந்திய அணி ஆட உள்ளது.

எனவே வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான வீரர்கள் தேர்வு, ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை மனதில் வைத்தே அமையும். அந்த வகையில் இங்கிலாந்தில் சொதப்பிய ஷிகர் தவான், டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது. இங்கிலாந்தில் அந்த அணிக்கு எதிராக நடந்த 5 டெஸ்ட் போட்டிகளில் 4ல் கலந்துகொண்டு ஆடிய தவான், ஒரு போட்டியில் கூட சரியாக ஆடவில்லை.

வெளிநாடுகளில் தொடர்ந்து சொதப்பிவரும் தவானை நீக்கவேண்டும் என்ற குரல்கள் வலுத்துள்ளன. அதனால் அவருக்கு பதிலாக இளம் வீரர் பிரித்வி ஷா அல்லது மயன்க் அகர்வால் ஆகிய இருவரில் ஒருவர் தேர்வு செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இங்கிலாந்து தொடருக்கான கடைசி இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணியில் பிரித்வி ஷா இடம்பெற்றிருந்தார். ஆனால் ஆடும் லெவனில் இடம் கிடைக்கவில்லை. ஆனால் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் பிரித்வி ஷாவோ அல்லது மயன்க் அகர்வாலோ களமிறக்கப்பட வாய்ப்புள்ளது.