இந்தியாவிற்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் மண்ணை கவ்வியதற்கு இந்திய அணியின் ஸ்பின்னர் குல்தீப் யாதவ் தான் முக்கிய காரணம் என வெஸ்ட் இண்டீஸ் அணியின் விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் தினேஷ் ராம்தின் தெரிவித்துள்ளார். 

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய மூன்று தொடர்களையுமே இந்திய அணி வென்றுவிட்டது. சீனியர் வீரர்கள் இல்லாமல் இளம் அணியாக இருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணி, இந்தியாவிடம் முழுவதுமாக சரணடைந்துவிட்டது. 

சொந்த மண்ணில் அசைக்க முடியாத சக்தியாக திகழும் இந்திய அணியை இந்திய மண்ணில் வீழ்த்துவது கடினமான காரியம்தான். எனினும் முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி, அதே ரிதத்தை தொடரவில்லை. அதன்பிறகு பயங்கரமாக சொதப்பியது. இந்த தொடர் முழுவதுமே இந்திய அணிதான் ஆதிக்கம் செலுத்தியது. 

முதலிரண்டு ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக ஆடிய வெஸ்ட் இண்டீஸ், கடைசி இரண்டு ஒருநாள் போட்டிகளில் படுதோல்வி அடைந்தது. டி20 போட்டிகளிலும் சொதப்பலாக ஆடி தொடரை இழந்தது. எஞ்சியுள்ள ஒரு டி20 போட்டி இன்று சென்னையில் நடைபெற உள்ள நிலையில், அந்த போட்டியிலும் வென்று வெஸ்ட் இண்டீஸை ஒயிட் வாஷ் செய்யும் முனைப்பில் இந்திய அணி உள்ளது. 

இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணியின் தோல்வி குறித்து பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு வெஸ்ட் இண்டீஸ் வீரர் தினேஷ் ராம்தின் அளித்த பேட்டியில், குல்தீப் யாதவின் பந்துவீச்சை கணிக்கமுடியாமல் அவரது பவுலிங்கில் திணறி வீரர்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்தது தான் தங்கள் அணியின் தோல்விக்கு காரணம் என தெரிவித்தார். 

குல்தீப் யாதவின் கை அசைவுகளையும் பவுலிங்கையும் கணிக்க முடியாததால் எங்கள் வீரர்கள் அவரது பந்துவீச்சை சிறப்பாக ஆடவில்லை. மிடில் ஓவர்களில் குல்தீப் யாதவ் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்தார் என ராம்தின் தெரிவித்துள்ளார்.