இன்டியன் வெல்ஸ் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் நடப்புச் சாம்பியனான ரோஜர் ஃபெடரரை வீழ்த்தி ஜுவான் மார்டின் டெல் போட்ரோ சாம்பியன் பட்டம் வென்றார்.

இன்டியன் வெல்ஸ் டென்னிஸ் போட்டியின் அமெரிக்காவில் நடைபெற்றது. இதன் இறுதிச்சுற்றில் உலகின் 8-ஆம் நிலை வீரரான ஆர்ஜென்டீனாவின் ஜுவான் மார்டின் டெல் போட்ரோவும், உலகின் முதல் நிலை வீரரான ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரரும் மோதினர்.

இதில், ரோஜர் ஃபெடரரை 6-4, 6-7(8/10), 7-6(7/2) என்ற செட்களில் வீழ்த்தி சாம்பியனானார் டெல் போட்ரோ.

வெற்றிக்குப் பிறகு டெல் போட்ரோ, "இந்தப் போட்டியில் இறுதி ஆட்டத்தில் ஃபெடரரை வீழ்த்தி சாம்பியன் ஆனதை நம்ப இயலவில்லை. எனது இடது கை மணிக்கட்டுப் பகுதியில் 3-ஆவது முறையாக அறுவைச் சிகிச்சை செய்யும்போது, டென்னிஸை கைவிடும் மனநிலையில் நான் இருந்ததை அனைவரும் அறிவார்கள்.

அதிலிருந்து மீண்டு வருவதற்கு அதிக முயற்சிகள் மேற்கொண்டேன். எனது ஆட்டத்தை எந்த அளவுக்கு மேம்படுத்த இயலும் என்பதை அறிய விரும்பினேன். தற்போது எனது வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்து வருகிறேன். அடுத்தது என்ன என்ற ஆர்வத்துடன் காத்திருக்கிறேன். 

தரவரிசை குறித்து கருத்தில் கொள்ள விரும்பவில்லை. என்னால் முடிந்த வரையில் பட்டங்கள் வெல்ல நினைக்கிறேன். அதற்கு இந்த ஆண்டு முழுவதும் நான் உடல்நலத்துடனும், நினைத்த போட்டிகளில் விளையாடும் உடல்தகுதியுடனும் இருக்க வேண்டும். எனது இந்த தொடர் வெற்றிகள் எனக்கே ஆச்சர்யமளிக்கின்றன" என்று அவர் கூறினார்.