இதுவரை ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை வென்றிராத டெல்லி டேர்டெவில்ஸ் அணி, அடுத்த சீசனில் கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ள டெல்லி அணியின் பயிற்சியாளர் குழுமத்தில் இந்திய அணியின் முன்னாள் வீரர் இணைந்துள்ளார். 

கடந்த 2008ம் ஆண்டிலிருந்து ஐபிஎல் தொடர் நடத்தப்பட்டுவருகிறது. இதுவரை 11 சீசன்கள் நடந்து முடிந்துள்ளன. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் தலா மூன்று முறையும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ஹைதராபாத்(டெக்கான் சார்ஜர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்) அணிகள் தலா இரண்டு முறையும் கோப்பையை வென்றுள்ளன. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஒருமுறை ஐபிஎல் தொடரை வென்றுள்ளது. 

பஞ்சாப், பெங்களூரு, டெல்லி ஆகிய மூன்று அணிகளும் இதுவரை ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை வென்றதில்லை. இந்த மூன்று அணிகளுமே கடந்த சீசனில் கோப்பையை வெல்லும் முனைப்பில் இருந்தது. ஆனால் கடந்த முறையும் இந்த அணிகளின் கனவு தகர்ந்தது. 

இந்நிலையில், 2019 சீசனில் கோப்பையை வெல்லும் முனைப்பில் டெல்லி அணி தீவிரமாக உள்ளது. ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வெற்றி கேப்டன் ரிக்கி பாண்டிங், டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டுவருகிறார். இந்திய அணியில் அறிமுகமாகி மிரட்டி கொண்டிருக்கும் இளம் திறமைகளான பிரித்வி ஷா, ரிஷப் பண்ட் ஆகியோர் டெல்லி அணியில் தான் உள்ளனர். அவர்களை கண்டிப்பாக அந்த் அணி தக்கவைக்கும். ஷ்ரேயாஸ் ஐயர், விஜய் சங்கர் போன்ற வீரர்களும் டெல்லி அணியில் உள்ளனர். இளம் வீரர்களை உள்ளடக்கிய டெல்லி அணியின் பயிற்சியாளர் குழுமத்தில் இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் இணைந்துள்ளார். 

ரிக்கி பாண்டிங் தலைமை பயிற்சியாளராக உள்ள டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் உதவி பயிற்சியாளராக முகமது கைஃப் நியமிக்கப்பட்டுள்ளார். மிகச்சிறந்த ஃபீல்டரான முகமது கைஃப், 2000லிருந்து 2006ம் ஆண்டுவரை இந்திய அணிக்காக ஆடினார். அதன்பிறகு அணியில் இடம் கிடைக்காமல் இருந்துவந்த கைஃப் அண்மையில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தனது ஓய்வை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.