ஐபிஎல்லில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் ஆடிய தீபக் ஹூடா, விஜய் ஹசாரே தொடரில் ஆடும் பரோடா அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 

உள்ளூர் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே தொடர் வரும் 19ம் தேதி தொடங்குகிறது. 19ம் தேதி முதல் அக்டோபர் 20ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடரில் மும்பை, டெல்லி, மகாராஷ்டிரா, கோவா, கேரளா, ஆந்திரா, ஹைதராபாத், மத்திய பிரதேசம், ஹிமாச்சல் பிரதேசம் உள்ளிட்ட பல அணிகள் கலந்துகொள்கின்றன. 

இத்தொடரில் ஆடும் உத்தர பிரதேச அணியின் கேப்டனாக சுரேஷ் ரெய்னா நியமிக்கப்பட்டுள்ளார். யோ யோ டெஸ்டில் தேறாததால், ஓராண்டாக இந்திய அணியில் இடம் கிடைக்காமல் இருந்த ரெய்னா, இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் ஆடினார். அதிலும் பெரியளவில் சோபிக்கவில்லை. அதனால் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்துவரும் ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் ரெய்னாவிற்கு இடம் கிடைக்கவில்லை. இந்நிலையில் உத்தர பிரதேச அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். ரெய்னா தலைமையிலான இந்த அணியில், ரிங்கு சிங், அன்கிட் ராஜ்பூட் உள்ளிட்ட வீரர்கள் உள்ளனர். 

மும்பை அணியின் கேப்டனாக ரஹானேவும் துணை கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களும் ஆசிய கோப்பையில் ஆட வாய்ப்பு கிடைக்காததால் விஜய் ஹசாரேவில் மும்பை அணிக்காக ஆடுகின்றனர். 

அதேபோல் டெல்லி அணியின் கேப்டனாக மீண்டும் கவுதம் காம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார். அணி நிர்வாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த அந்த அணியின் கேப்டன்சி பொறுப்பிலிருந்து காம்பீர் விலகினார். இந்நிலையில், இம்முறை மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 

இதையடுத்து பரோடா அணியின் கேப்டனும் அறிவிக்கப்பட்டுள்ளார். பரோடா அணியின் கேப்டனாக தீபக் ஹூடா நியமிக்கப்பட்டுள்ளார். தீபக் ஹூடா 2014 மற்றும் 2015 ஆகிய ஐபிஎல் தொடர்களில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஆடினார். 2016லிருந்து 2018 வரை மூன்று ஐபிஎல் தொடர்களில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக ஆடினார். இந்நிலையில், விஜய் ஹசாரே தொடரில் பரோடா அணியின் கேப்டனாக தீபக் ஹூடா நியமிக்கப்பட்டுள்ளார். ஹூடாவின் தலைமையிலான இந்த அணியில் அனுபவ வீரர் யூசுப் பதான் மற்றும் குருணல் பாண்டியா ஆகியோர் உள்ளனர்.