பாரா ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய குண்டு எறிதல் வீராங்கனை தீபா மாலிக்கிற்கு ரூ.4 கோடி பரிசுத் தொகைக்கான காசோலையை பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார்.
அரியாணா மாநிலம் குர்கானில் நடைபெற்ற ஹரியாணா பொன்விழா நிகழ்ச்சியில் தீபாவுக்கு அந்த காசோலை வழங்கப்பட்டது. மேடையில் இருந்த மோடி, சக்கர நாற்காலியில் வந்த தீபாவுக்காக சில படிகள் இறங்கி வந்து அதனை வழங்கி கெளரவித்தார். உடன், அரியாணா ஆளுநர் கப்தான் சிங் சோலங்கி, முதல்வர் மனோகர் லால் கட்டர், மாநில இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனில் விஜ் ஆகியோர் இருந்தனர்.
பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ள தீபா, குண்டு எறிதல் போட்டியில் 4.61 மீ. தூரம் எறிந்து இரண்டாம் இடம் பிடித்தார்.
