கிரிக்கெட்டில் பேட்டிங், பவுலிங் ஆகியவற்றில் தலைசிறந்து விளங்கியவர்கள், விளங்குபவர்கள் பலர். ஆனால் தனித்தனி துறைகளை கடந்து ஒட்டுமொத்தமாக ஒரு தலைசிறந்த, அறிவுக்கூர்மையான முழு கிரிக்கெட்டராக திகழ்பவர் தோனி. அவர் கேப்டன்சியிலிருந்து விலகினாலும் அவரது ஆலோசனைகள் நல்ல பலனை கொடுப்பதோடு, பல தருணங்களில் திருப்புமுனைகளாக அமைந்துவிடும். 

அதிவேக ஸ்டம்பிங், சமயோசித ரன் அவுட்டுகள், அபாரமான கேட்ச்கள் என விக்கெட் கீப்பிங்கில் மிரட்டுபவர் தோனி. அத்துடன் இல்லாமல், எதிரணி வீரர்களின் பேட்டிங் உத்திகளை அறிந்து, அவர்களின் பிளஸ், மைனஸ்களை தெரிந்துகொண்டு அதற்கேற்றபடி பவுலர்களுக்கு ஆலோசனைகளை வழங்குவதோடு ஃபீல்டிங் செட்டப்பிலும் உதவுவார். 

தோனி பேட்டிங்கில் கடந்த ஓராண்டாக சொதப்பினாலும், அவரது அனுபவமான ஆலோசனைகள் மற்றும் விக்கெட் கீப்பிங்கிற்காகவே, அவர் அணியிலிருந்து எந்த தருணத்திலும் நீக்கப்பட்டதில்லை. கடந்த ஓராண்டுக்கும் மேலாக பேட்டிங்கில் சொதப்பிவந்த தோனி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஹாட்ரிக் அரைசதமடித்து மீண்டும் ஃபார்முக்கு திரும்பியுள்ளார். 

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் சிறப்பாக பேட்டிங் ஆடி 48 ரன்களை குவித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அந்த போட்டியில் அவர் ரோஸ் டெய்லரை செய்த ஸ்டம்பிங் மிரட்டலானது. தொடையில் ஏற்பட்ட காயத்தால் அவர் நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது மற்றும் நான்காவது ஒருநள் போட்டிகளில் ஆடவில்லை.

மே மாதம் தொடங்க உள்ள உலக கோப்பையில் இந்திய அணிக்கு தோனி மிகப்பெரிய பங்களிப்பை செய்ய உள்ளார் என்பதில் துளியும் ஐயமில்லை. இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் தீப் தாஸ்குப்தா, மை நேஷன் ஆங்கில இணையதளத்துக்கு அளித்த பேட்டியில், தோனிதான் உலகின் சிறந்த விக்கெட் கீப்பர் என்று புகழ்ந்துள்ளார்.

ரஞ்சி தொடரில் கர்நாடகா மற்றும் சவுராஷ்டிரா அணிகளுக்கு இடையே பெங்களூருவில் நடந்த அரையிறுதி போட்டியின் வர்ணனையாளராக இருந்தார் தீப் தாஸ்குப்தா. அப்போது தீப் தாஸ்குப்தா மை நேஷன் இணையதளத்துக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம் உலகின் சிறந்த விக்கெட் கீப்பர் யார் என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த தீப் தாஸ்குப்தா, தோனிதான் உலகின் மிகச்சிறந்த விக்கெட் கீப்பர். அவரது விக்கெட் கீப்பிங் ஸ்டைல் தனித்துவமானது. தோனியின் மற்ற விஷயங்களை(பேட்டிங்கை) தவிர்த்துவிட்டு, விக்கெட் கீப்பிங்கை பொறுத்தமட்டில் பார்த்தால், அவர்தான் உலகின் பெஸ்ட் விக்கெட் கீப்பர். அவருக்கு அடுத்து ரித்திமான் சஹாவை சொல்லுவேன். நான் பார்த்த மிகச்சிறந்த கீப்பர்களில் சஹாவும் ஒருவர் என்று தாஸ்குப்தா தெரிவித்தார்.