ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் அபாரமாக ஆடி சதமடித்து இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்து, ஒருநாள் முழுதும் பேட்டிங் ஆடிய புஜாராவை மிகச்சிறந்த தரமான ரன் அவுட் மூலம் பெவிலியனுக்கு அனுப்பிவைத்தார் பாட் கம்மின்ஸ். 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே இந்திய நேரப்படி இன்று காலை 5.30 மணிக்கு அடிலெய்டில் தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி பேட்டிங்கில் படுமோசமாக சொதப்பியது. 

இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ராகுல் மற்றும் முரளி விஜய் முறையே 2 மற்றும் 11 ரன்களில் ஆட்டமிழந்தனர். இதையடுத்து கோலி(3), ரஹானே(13), ரோஹித் சர்மா(37), ரிஷப் பண்ட்(25), அஷ்வின்(25) என வரிசையாக ஆட்டமிழந்தனர். ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து நின்று நிதானமாகவும் பொறுப்புடனும் ஆடிய புஜாரா, டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 16வது சதத்தை பூர்த்தி செய்தார். 

சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த புஜாரா, முதல் நாளான இன்றைய ஆட்டநேர முடிவில் ஆட்டமிழந்து வெளியேறினார். இன்றைய ஆட்டம் முடிய இருந்த நிலையில், 88வது ஓவரின் 5வது பந்தில் தேவையில்லாமல் ரன் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். அத்துடன் முதல் நாள் ஆட்டம் முடிந்தது. 246 பந்துகளை எதிர்கொண்டு 123 ரன்களை குவித்த புஜாரா, 9வது விக்கெட்டாக ஆட்டமிழந்தார். 

மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ், ஹேசில்வுட், நாதன் லயன் என எந்த ஆஸ்திரேலிய பவுலராலும் புஜாராவின் விக்கெட்டை வீழ்த்த முடியவில்லை. களத்தில் ஆதிக்கம் செலுத்தி ஆடிய புஜாராவின் இன்னிங்ஸை அருமையான ரன் அவுட் மூலம் முடித்து வைத்தார் கம்மின்ஸ். மிட் ஆன் திசையில் அடித்துவிட்டு ஒரு ரன் எடுக்க முயன்றார் புஜாரா. ஆனால் அந்த பந்தை பிடித்த கம்மின்ஸ், ஸ்டம்புக்கு பக்கவாட்டில் இருந்து அருமையாக அடித்து ரன் அவுட் செய்தார். உண்மையாகவே சூப்பரான ரன் அவுட் இது. அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.