மூன்றாவது டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கிய ஹனுமா விஹாரியின் பலவீனத்தை கண்டறிந்து அதே பந்தில் அவரை வீழ்த்தினார் கம்மின்ஸ். 

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் இன்று காலை இந்திய நேரப்படி 5 மணிக்கு தொடங்கி நடந்துவருகிறது. தொடர் 1-1 என சமநிலையில் உள்ளதால் இந்த போட்டியில் இரு அணிகளுமே வெல்லும் முனைப்பில் களமிறங்கியுள்ளன. 

டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. தொடர்ந்து சொதப்பிவந்த தொடக்க ஜோடியான ராகுலும் முரளி விஜயும் நீக்கப்பட்டு பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே ஹனுமா விஹாரியும் அறிமுக வீரர் மயன்க் அகர்வாலும் களமிறங்கினர். இருவரும் நிதானமாக தொடங்கி ஓரளவுக்கு நல்ல அடித்தளத்தை அமைத்தனர். 66 பந்துகளை எதிர்கொண்ட விஹாரி 8 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் மறுமுனையில் நிதானமாகவும் தெளிவாகவும் ஆடிய மயன்க் அகர்வால் அரைசதம் கடந்து சதத்தை நோக்கி சென்றார். எனினும் 76 ரன்களில் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். 

அதன்பிறகு புஜாராவுடன் கோலி ஜோடி சேர்ந்து சிறப்பாக ஆடினார். புஜாராவும் அரைசதம் அடித்தார். மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 215 ரன்கள் எடுத்துள்ளது. புஜாரா 68 ரன்களுடனும் கோலி 47 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

முதல் தர கிரிக்கெட்டில் கூட தொடக்க வீரராக களமிறங்கியதில்லை. அவர் மிடில் ஆர்டர் வீரர். எனவே அவருக்கு தொடக்க வீரர் என்ற ரோல் முற்றிலும் புதிதானது. அதுவும் ஆஸ்திரேலிய மண்ணில் அந்த அணிக்கு எதிராக புதிதாக ஒரு ரோலை ஏற்று செயல்படுவது என்பது எளிதான காரியம் அல்ல. 

எனினும் அகர்வாலுடன் தொடக்க வீரராக களமிறங்கிய ஹனுமா விஹாரி, மிகவும் நிதானமாகவே தொடங்கினார். 66 பந்துகளை எதிர்கொண்டு வெறும் 8 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். விஹாரி தொடக்க வீரராக சோபிக்காவிட்டாலும் அவரது டெஸ்ட் கிரிக்கெட் எதிர்காலத்திற்கு எந்த பாதிப்பும் இருக்காது. அவர் மீண்டும் மிடில் ஆர்டரிலேயே களமிறக்கப்படுவார். 

அதெல்லாம் பிரச்னை இல்லை என்றாலும் விஹாரியின் பலவீனத்தை கண்டறிந்துவிட்டார் கம்மின்ஸ். விஹாரிக்கு உடலுக்கு நேராக சில பவுன்ஸர்களை வீசினார். அந்த பவுன்ஸர்களை அடிக்கலாமா விட்டுவிடலாமா என்ற சந்தேகத்திலேதான் அணுகினார் விஹாரி. விஹாரி உடலுக்கு நேராக வரும் பவுன்ஸரை எதிர்கொள்ள திணறுகிறார் என்பதை அறிந்த கம்மின்ஸ், அதே லைன் அண்ட் லெந்த்தில் சில பந்துகளை வீசினார். இறுதியில் உடலுக்கு நேராக வந்த பவுன்ஸரில்தான் விஹாரி அவுட்டானார். அதுவும் அடிக்கலாமா வேண்டாமா என்ற சந்தேகத்தில் அணுகிதான் விக்கெட்டை பறிகொடுத்தார். 

தொடக்க வீரராக சோபிக்க முடியாமல் போயிருந்தால் மட்டும் பரவாயில்லை. ஆனால் பலவீனத்தை காட்டிவிட்டாரே என்பதுதான் பெரும் கவலையான விஷயம்.