csk faces srh in ipl final today
ஐபிஎல் 11வது சீசன் இன்றுடன் முடிகிறது. கடந்த ஏப்ரல் மாதம் 7ம் தேதி தொடங்கி ஒன்றரை மாதத்துக்கும் மேலாக நடந்துவந்த ஐபிஎல் தொடர், இன்றுடன் முடிவடைகிறது.
மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கும் இறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் பலப்பரீட்சை செய்கின்றன.
மூன்றாவது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்புடன் சென்னை அணியும் இரண்டாவது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்புடன் ஹைதராபாத் அணியும் களம் காண்கின்றன.
கேன் வில்லியம்சன் தலைமையிலான ஹைதராபாத் அணி, பவுலிங்கில் சிறந்த அணியாக திகழ்கிறது. டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களும் சிறப்பாக ஆடுகின்றனர். ஆனால், மிடில் ஆர்டர் தொடர்ச்சியாக சொதப்புகின்றனர். இரண்டாவது தகுதி சுற்று போட்டியில், ரஷீத் கான் அதிரடியாக பேட்டிங் செய்து மிரட்டினார். அதனால் மிடில் ஆர்டர் சொதப்பும் பட்சத்தில் ஹைதராபாத் அணி ரஷீத் கானை சார்ந்திருக்கும்.
சென்னை அணி பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே சிறந்து விளங்குகிறது. ஆனால் கடைசி ஓவர்களில் தொடர்ந்து சொதப்பி வந்தது. லுங்கி நிகிடியின் வருகைக்கு பிறகு, கடைசி ஓவர்களிலும் ஓரளவிற்கு சிறப்பாகவே வீசுகிறது.
இரு அணிகளின் கேப்டன்களுமே நல்ல ஃபார்மில் உள்ளனர். சமபலம் வாய்ந்த, சிறந்த கேப்டன்களை கொண்ட இரு அணிகள் இறுதி போட்டியில் மோதுவதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
