Congratulates the Indian womens team for the final round - BCCI
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு முன்னேறியிருக்கும் இந்திய மகளிர் அணிக்கு பிசிசிஐ பாராட்டுகளைத் தெரிவித்துள்ளது.
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. அதில் டெர்பியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைப்பெற்ற அரையிறுதியில் இந்திய அணி 36 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது.
இதில் இந்திய வீராங்கனை ஹர்மன்பிரீத் கெளர் 115 பந்துகளில் 7 சிக்ஸர், 20 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 171 ஓட்டங்கள் குவித்து அசத்தினார்.
இந்த நிலையில் பிசிசிஐ தலைவர் (பொறுப்பு) சி.கே.கன்னா கூறியது:
“நடப்புச் சாம்பியனான ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதியில் ஹர்மன்பிரீத் கெளர் 171 ஓட்டங்கள் குவித்ததை நினைத்து நாங்கள் அனைவரும் பெருமை கொள்கிறோம்.
ஹர்மன்பிரீத் கௌர், இந்திய கேப்டன் மிதாலி ராஜ், இந்திய வீராங்கனைகள் ஆகியோருக்கு பிசிசிஐ சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
உலகக் கோப்பை போட்டியில் சிறப்பாக செயல்பட்டிருக்கும் இந்திய மகளிர் அணிக்கு ரொக்கப் பரிசு அறிவிப்பது குறித்து ஆலோசனை நடத்தப்படும்.
இந்திய அணி உலகக் கோப்பையோடு நாடு திரும்ப வேண்டும் என நாங்கள் அனைவரும் எதிர்பார்த்துள்ளோம்” என்று அவர் கூறினார்.
