காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் மீராபாய் சானு தங்கப் பதக்கமும், பி.குருராஜா வெள்ளியுடன் இந்தியா பதக்க வேட்டையை தொடங்கியுள்ளது.

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் - 21 ஆஸ்திரேலியாவின் கோல்ட்கோஸ்ட் நகரில் புதன்கிழமை தொடங்கியது. 

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் போட்டிகளைத் தொடங்கி வைத்தார். இந்தியா சார்பில் 220 பேர் கொண்ட அணி உள்பட மொத்தம் 4500 வீரர்கள், வீராங்கனைகள் 11 நாள்கள் நடைபெறும் போட்டியில் கலந்து கொண்டுள்ளனர்.

அதில், பெண்களுக்கான 48 கிலோ எடைப்பிரிவில் உலக சாம்பியன் மீராபாய் சானு புதிய சாதனையுடன் முதல் தங்கத்தை வென்றார். 

ஸ்நாட்ச் பிரிவில் 86 கிலோவும், கிளீன் அன்ட் ஜெர்க் பிரிவில் 110 கிலோ எடை (மொத்தம் 196 கிலோ) தூக்கி மீராபாய் சானு புதிய காமன்வெல்த் விளையாட்டு சாதனையை நிகழ்த்தினார். 

இதற்கு முன்பு கடந்த 2010-இல் நைஜீரியாவின் அகஸ்டினா 175 கிலோ தூக்கியதே சாதனையாக விளங்கியது. அனைவரின் எதிர்பார்ப்பின் படியே மீராபாய் சானு தங்கப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

இதேபோன்று, பளு தூக்குதலில் ஆடவர் 56 கிலோ பிரிவில் இந்தியாவின் பி.குருராஜா 249 கிலோ தூக்கி நாட்டுக்கு முதல் வெள்ளிப் பதக்கத்தை பெற்றுத் தந்தார். 

இந்தப் பிரிவில் மலேசியாவின் முகமது இசார் அகமது (261 கிலோ) தங்கப் பதக்கமும், இலங்கையின் சதுரங்கா லக்மல் (248 கிலோ) வெண்கலப் பதக்கமும் வென்றனர். 

குருராஜா ஸ்நாட்ச் பிரிவில் 111 கிலோ எடையும், கிளீன் அன்ட் ஜெர்க் பிரிவில் 138 கிலோவும் என மொத்தம் 249 கிலோ எடையை தூக்கி வெள்ளிப் பதக்கம் வென்றார். 

மற்றொரு போட்டியில் தமிழகத்தில் கோவில்பட்டியைச் சேர்ந்த முத்துப்பாண்டி ராஜா ஆடவர் 62 கிலோ எடைப்பிரிவில் வெறும் 266 கிலோ மட்டுமே தூக்கி 6-வது இடத்தையே பெற முடிந்தது.