இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து ரவி சாஸ்திரியை நீக்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சேத்தன் சவுகர் வலுயுறுத்தியுள்ளார். 

இங்கிலாந்துக்கு எதிரான தொடரை இழந்ததன் எதிரொலியாக கேப்டன் விராட் கோலியும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியிருக்கின்றனர். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர், தற்போது இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் என இந்திய அணி தொடர்ந்து இரண்டு முறை வெளிநாட்டு டெஸ்ட் தொடர்களை இழந்துள்ளது. 

இந்த தொடர் தோல்விக்கு பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் கேப்டன் விராட் கோலியும் பொறுப்பேற்க வேண்டும் என்ற குரல்களும் வலுத்துள்ளன. கேப்டன் விராட் கோலியின் கள வியூகம், பவுலர்களை பயன்படுத்தும் விதம் ஆகியவை குறித்து ஏராளமான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. 

கேப்டன் கோலியை விட அதிகமான விமர்சனங்களுக்கு ஆளாகியிருப்பது பயிற்சியாளர் ரவி சாஸ்திரிதான். இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் வீரர்களை அடிக்கடி மாற்றியது, காயத்துடன் வீரர்களை ஆடவிட்டது என பல்வேறு விமர்சனங்கள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மீது எழுந்துள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்ததுமே பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் செயல்பாடுகள் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டன. கடுமையான விமர்சனங்களும் எழுந்தன. பயிற்சியாளர் ரவி சாஸ்திரியை நீக்கிவிட்டு மீண்டும் அனில் கும்ப்ளேவை தலைமை பயிற்சியாளராக நியமிக்க வேண்டும் என்ற குரல்களும் எழுந்தன. 

தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுப்பதாக நினைத்து, கடந்த 15 ஆண்டுகளில் தற்போதைய இந்திய அணி தான் வெளிநாடுகளில் சிறப்பாக ஆடிவருகிறது என்று கூறி அதற்கும் வாங்கிக் கட்டிக்கொண்டார் ரவி சாஸ்திரி. ரவி சாஸ்திரியின் இந்த கருத்துக்கு, கங்குலி, கவாஸ்கர், சேவாக் ஆகிய முன்னாள் வீரர்கள் தக்க பதிலடி கொடுத்திருந்தனர். 

தொடர்ந்து ரவி சாஸ்திரி மீதான விமர்சனங்கள் எழுந்து கொண்டேயிருக்கின்றன. இப்போது இந்திய அணியின் முன்னாள் வீரர் சேத்தன் சவுகானும் ரவி சாஸ்திரியை தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். 

இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள சேத்தன் சவுகான், ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கு முன்னதாக ரவி சாஸ்திரியை பயிற்சியாளர் பதவியிலிருந்து நீக்க வேண்டும். அவர் ஒரு சிறந்த கிரிக்கெட் விமர்சகர். அவரை அந்த பணியை செய்ய அனுமதிக்க வேண்டும். தற்போதைய இந்திய அணிதான் வெளிநாடுகளில் சிறப்பாக ஆடும் சிறந்த டிராவலிங் அணி என ரவி சாஸ்திரி கூறியிருப்பது நகைப்புக்குரியது. 1980களில் ஆடிய அணி தான் சிறந்த டிராவலிங் அணி என சேத்தன் சவுகான் தெரிவித்துள்ளார்.