Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சென்னை

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர் போட்டியில் சென்னையில் நடந்த லீக் ஆட்டத்தில் சென்னை அணி 2-0 என்ற கோல் கணக்கில் கோவாவை வீழ்த்தி முதல் வெற்றியை ருசித்தது.

மூன்றாவது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நடப்பு சாம்பியன் சென்னையின் எப்.சி., அட்லெடிகோ டீ கொல்கத்தா, நார்த் ஈஸ்ட் யுனைடெட் எப்.சி. (கவுகாத்தி), கேரளா பிளாஸ்டர்ஸ் எப்.சி., எப்.சி.புனே சிட்டி, மும்பை சிட்டி எப்.சி., எப்.சி.கோவா, டெல்லி டைனமோஸ் எப்.சி. ஆகிய 8 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் உள்ளூர்-வெளியூர் அடிப்படையில் தலா இரண்டு முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும்.

இந்த போட்டி தொடரில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த 12-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னையின் எப்.சி. அணி, எப்.சி.கோவா அணியை எதிர்கொண்டது.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் சென்னை அணி தொடக்கம் முதலே தாக்குதல் ஆட்டத்தை தொடுத்தது. 15-வது நிமிடத்தில் சென்னை அணி முதல் கோல் போட்டது. ரபெல் அகுஸ்டா கடத்தி கொடுத்த பந்தை சக வீரர் ஹன்ஸ் முல்டெர் (நெதர்லாந்து) அபாரமாக அடித்து கோலாக்கினார். 26-வது நிமிடத்தில் சென்னை அணி 2-வது கோலை அடித்தது. பல்ஜித் சானி கடத்தி கொடுத்த பந்தை சக அணி வீரர் வாடூ (இந்தியா) கோலுக்குள் திணித்தார். முதல் பாதியில் சென்னை அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.

பின் பாதியில் பதில் கோல் திருப்ப கோவா அணி ஆக்ரோஷமாக போராடியது. ஆனால் அதற்கு கடைசி வரை பலன் கிடைக்கவில்லை. 53-வது நிமிடத்தில் சென்னை அணி வீரர் டேவிட் சுசியுடன் (இத்தாலி), கோவா அணி வீரர் கான்கால்வ்ஸ் (பிரேசில்) முரட்டுத்தனமாக மோதினார். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. நடுவர் தலையிட்டு சமாதானப்படுத்தினார். கான்கால்வ்ஸ்க்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. முடிவில் சென்னை அணி 2-0 என்ற கோல் கணக்கில் கோவாவை வீழ்த்தி முதல் வெற்றியை ருசித்தது. கோவா அணி தொடர்ந்து சந்தித்த 3-வது தோல்வி இதுவாகும்.

கொச்சியில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறும் 13-வது லீக் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் எப்.சி.-மும்பை சிட்டி எப்.சி. அணிகள் மோதுகின்றன. இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1, 2 சேனல்கள் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.