இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரில் சென்னையின் எப்.சி.-மும்பை சிட்டி அணிகள் இடையிலான ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.
சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தின் 5-ஆவது நிமிடத்தில் ஜெர்ரியின் கோல் வாய்ப்பை மும்பை முறியடித்தது. இதன்பிறகு இரு அணிகளும் அபாரமாக ஆட, முதல் பாதி ஆட்டம் கோலின்றி டிராவில் முடிந்தது.
பின்னர் நடைபெற்ற 2-ஆவது பாதி ஆட்டத்தின் 51-ஆவது நிமிடத்தில் சென்னை அணிக்கு கார்னர் கிக் வாய்ப்பு கிடைத்தது. அதில் பெலுúஸா துல்லியமாக பந்தை கிராஸ் செய்ய, கோல் கம்பத்தின் முன்னால் நின்ற ஜேஜே லால்பெக்குலா மிக எளிதாக அதை கோலாக்கினார்.
இதன்பிறகு மும்பை அணி கோலடிக்கப் போராட, 87-ஆவது நிமிடம் வரை பலன் கிடைக்கவில்லை. ஆனால் 88-ஆவது நிமிடத்தில் மும்பையின் லியோ கோஸ்டா கோலடிக்க, ஸ்கோர் சமநிலையை எட்டியது. இதனால் ஆட்டம் டிராவில் முடிந்தது. சென்னை அணி 10 புள்ளிகளுடன் 4-ஆவது இடத்தில் உள்ளது.
சென்னையில் கடந்த 29-ஆம் தேதி நடைபெற்ற சென்னை-கேரள அணிகள் இடையிலான ஆட்டத்தின் முடிவில் வீரர்களிடையே கை கலப்பு ஏற்பட்டது. அப்போது சென்னை பயிற்சியாளர் மெட்டாரஸியும் ஆடுகளத்துக்குள் புகுந்து மோதலில் ஈடுபட்டார். அதைத் தொடர்ந்து விதிமுறைய மீறியதற்காக அவருக்கு ஓர் ஆட்டத்தில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது.
இதனால் சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற சென்னை-மும்பை இடையிலான ஆட்டத்தின்போது அவர் ஆடுகளத்தின் அருகே வரவில்லை. மைதானத்தில் உள்ள பார்வையாளர் மாடத்தில் இருந்து ஆட்டத்தைப் பார்க்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டார்.
