Champions Trophy Cricket UK - New Zealand fights today
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியின் 6-ஆவது ஆட்டம் இங்கிலாந்து – நியூஸிலாந்து இடையே இன்று கார்டிஃப்பில் நடைப்பெறுகிறது.
முதல் ஆட்டத்தில் வங்கதேசத்தை வீழ்த்திய இங்கிலாந்து அணி, இந்த ஆட்டத்தில் வென்றால் அரையிறுதியை நோக்கி நகரும்.
அதேசமயம் நியூஸிலாந்து அணியைப் பொறுத்தவரையில் முதல் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டதால், அந்த அணிக்கு ஒரு புள்ளி மட்டுமே கிடைத்துள்ளதால் இந்த ஆட்டத்தில் வென்றால் மட்டுமே அந்த அணியால் அரையிறுதி வாய்ப்பை தக்கவைக்க முடியும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
ஒருவேளை நியூசிலாந்து தோற்றால் அந்த அணி போட்டியிலிருந்து வெளியேறுவது உறுதி.
இங்கிலாந்து அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரையில் அலெக்ஸ் ஹேல்ஸ், ஜேசன் ராய், ஜோ ரூட், கேப்டன் இயான் மோர்கன், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் என வலுவான பேட்ஸ்மேன்கள் உள்ளனர்.
கடந்த ஆட்டத்தில் வங்கதேச பெளலர்களை பந்தாடிய அலெக்ஸ் ஹேல்ஸ், ஜோ ரூட், இயான் மோர்கன் ஆகியோர் நியூஸிலாந்து பெளலர்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பார்கள்.
வேகப்பந்து வீச்சில் லியாம் பிளங்கெட், மார்க் உட், ஸ்டீவன் ஃபின் கூட்டணியையும், சுழற்பந்து வீச்சில் மொயீன் அலியையும் நம்பியுள்ளது இங்கிலாந்து.
நியூஸிலாந்து அணியில் மார்ட்டின் கப்டில், லுக் ரோஞ்சி, கேப்டன் கேன் வில்லியம்சன், ராஸ் டெய்லர், கோரே ஆண்டர்சன் ஆகியோர் பேட்டிங்கில் பலம் சேர்க்கின்றனர்.
முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சதமடித்த கேப்டன் கேன் வில்லியம்சன், அதிரடியாக ஆடிய லுக் ரோஞ்சி, ராஸ் டெய்லர் ஆகியோர் இந்த ஆட்டத்திலும் சிறப்பாக ஆடுவார்கள்.
வேகப்பந்து வீச்சில் டிம் செளதி, டிரென்ட் போல்ட், ஆடம் மில்னே ஆகியோரையும், சுழற்பந்து வீச்சில் மிட்செல் சேன்ட்னரையும் நம்பியுள்ளது நியூஸிலாந்து.
இங்கிலாந்து அணியின் விவரம்:
ஜேசன் ராய், அலெக்ஸ் ஹேல்ஸ், ஜோ ரூட், இயான் மோர்கன் (கேப்டன்), பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), மொயீன் அலி, லியாம் பிளங்கெட், டேவிட் வில்லே/ஜேக் பால், ஸ்டீவன் ஃபின், மார்க் உட்.
நியூஸிலாந்து அணியின் விவரம்:
மார்ட்டின் கப்டில், லுக் ரோஞ்சி (விக்கெட் கீப்பர்), கேன் வில்லியம்சன் (கேப்டன்), ராஸ் டெய்லர், நீல் புரூம், ஜேம்ஸ் நீஷம், கோரே ஆண்டர்சன், மிட்செல் சேன்ட்னர், ஆடம் மில்னே, டிம் செளதி, டிரென்ட் போல்ட்.
