பவுலர்களின் மனநிலையை புரிந்துகொண்டு தோனி எவ்வாறெல்லாம் உதவுவார் என்று ஸ்பின் பவுலர் சாஹல் விளக்கியுள்ளார். 

இளம் வீரர்களை ஊக்குவித்து வளர்த்தெடுப்பதிலும் பவுலர்களுக்கு ஆலோசனைகள் வழங்குவதிலும் தோனிக்கு நிகர் தோனி தான். வீரர்களுக்கு மட்டுமல்லாமல் கேப்டனுக்கும் இக்கட்டான நேரங்களில் ஆலோசனைகளை வழங்கி வழிநடத்த தோனி தவறியதில்லை. 

சீனியர் வீரர் மற்றும் முன்னாள் கேப்டன் என்ற முறையில் தனது அனுபவத்தின் வாயிலாக அவர் வழங்கும் ஆலோசனைகள், ஆட்டத்தின் போக்கையே மாற்றிவிடும். குறிப்பாக விக்கெட் கீப்பிங்கில் நின்றுகொண்டு அனைத்து பவுலர்களின் திறமை மற்றும் பலகீனம் ஆகியவற்றை அலசி ஆராய்ந்து, அதற்கேற்றபடி அவரவர்க்கு தேவையான ஆலோசனைகளை தோனி வழங்குவார். 

அஷ்வின், ஜடேஜா தொடங்கி குல்தீப் யாதவ், கடைசியில் கலீல் அகமது வரை அனைவருக்கும் தோனி பயனுள்ள ஆலோசனைகளை வழங்கி விக்கெட்டுகளை வீழ்த்த காரணமாக இருந்துள்ளார். 

அதுமாதிரியான ஒரு சம்பவத்தைத்தான் சாஹல் பகிர்ந்துள்ளார். தோனி குறித்து பேசிய ரிஸ்ட் ஸ்பின்னர் சாஹல், தோனி விக்கெட் கீப்பிங்கில் நின்றுகொண்டே பவுலர்களின் மனக்குழப்பத்தை புரிந்துகொள்வார். பவுலர்கள் குழப்பமான மனநிலையில் இருந்தால் உடனடியாக வந்து, எப்படி வீச வேண்டும் என்று ஆலோசனை வழங்குவார். பவுலர்களின் உடல்மொழியை வைத்தே அவர்களின் மனநிலையை புரிந்துகொள்வார் தோனி. 

ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான சூப்பர் 4 போட்டியில் பவர்பிளேயில் என்னிடம் பவுலிங் வீசுகிறாயா என்று கேப்டன் ரோஹித் சர்மா கேட்டார். நான் தோனியை பார்த்தேன். உடனே என்னை பந்துவீச பணித்த தோனி, ஸ்டம்பிற்கு நேராக வீசுமாறு அறிவுறுத்தினார். அதேபோல் ஸ்டம்பிற்கு நேராக வீசினேன். இமாம் உல் ஹக் எல்பிடபிள்யூ ஆனார் என்று சாஹல் தெரிவித்துள்ளார்.