நியூசிலாந்துக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் சாஹல், பேட்டிங்கில் ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். 

இந்திய அணியின் ரிஸ்ட் ஸ்பின்னர் சாஹல், தனது ஸ்பின் பார்ட்னரான குல்தீப்புடன் இணைந்து எதிரணி பேட்டிங் ஆர்டரை சரித்துவருகிறார். குல்தீப் - சாஹல் ஸ்பின் ஜோடி, இந்திய அணியின் மிகப்பெரிய பலமாக உள்ளது. எதிரணி எந்த அணியாக இருந்தாலும், மிடில் ஓவர்களில் கணிசமான விக்கெட்டுகளை வீழ்த்தி, இந்திய அணி ஆதிக்கம் செலுத்த முக்கிய பங்காற்றுகின்றனர். 

பவுலிங்கில் சிறந்த பங்களிப்பை அளித்துவந்த குல்தீப் - சாஹல் ஜோடி, நியூசிலாந்துக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் பேட்டிங்கிலும் ஜோடி சேர்ந்து அசத்தினர். 55 ரன்களுக்கே இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்துவிட்ட நிலையில், அதன்பிறகு குல்தீப் - சாஹல் ஜோடி நியூசிலாந்தின் பந்துவீச்சை நிதானமாக எதிர்கொண்டு ரன்களை சேர்த்தது. இருவரும் அவ்வப்போது ஒன்றிரண்டு பவுண்டரிகளையும் அடித்தனர். 9வது விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 25 ரன்களை சேர்த்தனர். ஆஸ்டிலின் பந்தில் குல்தீப் யாதவ் அவசரப்பட்டு தூக்கியடித்து 15 ரன்களில் ஆட்டமிழந்தார். 

ஆனால் குல்தீப்பின் விக்கெட்டுக்கு பிறகு கடைசி விக்கெட்டுக்கு சாஹல் நன்றாகவே ஆடினார். ஆஸ்டிலின் பந்தில் அபாரமாக ஸ்வீப் ஷாட் ஆடி பவுண்டரி அடித்தார் சாஹல். வேகப்பந்து வீச்சு மற்றும் ஸ்பின்னில் சில கவர் டிரைவ்களையும் சாஹல் அடித்தார். 37 பந்துகளை எதிர்கொண்ட சாஹல், 3 பவுண்டரிகளுடன் 18 ரன்கள் அடித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த போட்டியில் அதிக ரன்கள் அடித்த வீரர் சாஹல் தான். 10ம் வரிசையில் இறங்கி அதிக ரன்களை அடித்தார் சாஹல்.

ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்காக 10வது வரிசையில் களமிறங்கி அந்த குறிப்பிட்ட போட்டியில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர்களின் பட்டியலில் ஸ்ரீநாத்துக்கு அடுத்த இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார் சாஹல். 1996ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி ஒன்றில் 10ம் வரிசையில் இறங்கிய ஸ்ரீநாத், அந்த போட்டியில் 48 ரன்கள் அடித்தார். அந்த போட்டியில் ஸ்ரீநாத் அடித்தது தான் அதிகபட்ச ரன். அதற்கு அடுத்த இடத்தை சாஹல் பிடித்துள்ளார்.